பதிவு செய்த நாள்
26
டிச
2018
03:12
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாவட்டத் தில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில், நேற்று முன்தினம் (டிசம்., 24ல்) நள்ளிரவு, 12:00 மணிக்கு, கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது. புத்தாடை அணிந்து பங்கேற்ற கிறிஸ்தவர்கள், ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.நேற்று (டிசம்., 25ல்), காலை, 9:00 மணிக்கு அனைத்து தேவாலயங் களிலும், திருப்பலி நடத்தப்பட்டது.
ஊட்டி தூய இருதய ஆண்டவர் தேவாலயத்தில், நீலகிரி மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில், கூட்டு திருப்பலி நடந்தன. மேரீஸ் ஹில் தேவாலயத்தில், பாதிரியார் வின்சென்ட் தலைமையில் திருப்பலி நடந்தது. மேலும், டிரினிடி தேவாலயம், பிங்கர் போஸ்ட் தெரேசன்னை ஆலயம், காந்தல் குருசடி, புனித ஜூட்ஸ், சி.எஸ்,ஐ., வெஸ்லி, ரோஸ் மவுண்ட் மற்றும் ஸ்டீபன் தேவாலயங்களில் திருப்பலி நடந்தது.
இதுபோல், கோத்தகிரி, பந்தலூர், குன்னூர், அருவங்காடு, மஞ்சூர் உட்பட, மாவட்டத்தின் பல இடங்களில் உள்ள தேவாலயங்களில் நடந்த திருப்பலியில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.