பதிவு செய்த நாள்
27
டிச
2018
12:12
கோவை: ஸ்ரீஐயப்பன் பூஜா சங்கம் சார்பில், 68வது பூஜா மஹோத்ஸவம், நேற்று கோலாகலமாக துவங்கியது. தொடர்ந்து ஐந்து நாட்கள், விசஷே ஹோமங்கள், நாமசங்கீர்த்தன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.கோவை, ராம்நகர், சத்தியமூர்த்தி ரோட்டில் உள்ள, ஸ்ரீஐயப்பன் பூஜா சங்கத்தில், நேற்று காலை, 5:30க்கு ஸ்ரீகணபதி ஹோமம், ஸ்ரீதர்மசாஸ்தா ஸ்ரீஅம்பாள் ஆவாஹனம், சூர்யநமஸ்காரம், அபிஷேகம், காலை, 9:00க்கு, நவக்ரஹ ஹோமம், ஸ்ரீசுதர்சன ஹோமம், சுப்ரமணிய சத்ருசம்ஹார திரிசதி ஹோமம், உபநிஷத் பாராயணம் ஆகியவை நடைபெற்றன. இரவு, 7:00க்கு, பாலக்காடு சாத்தப்புரம் குமாரி ஸ்ருதி மற்றும் ஸ்ரீநிதி சகோதரிகளின் நாமசங்கீர்த்தனம் நடந்தது.சுந்தரவாத்தியார் தலைமையில் ஹோமங்கள் நடைபெற்றன. ஒரு ஹோமக்குண்டத்துக்கு, 22 பேர் வேதவிற்பன்னர்கள் வீதம், ஐந்து ஹோமக்குண்டங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. காலை, 5:30க்கு துவங்கிய ஹோமம், பகல், 12:00 மணிக்கு பூர்ணாஹுதி, வசோர்தாரை, மஹா தீபாராதனையோடு முதல்நாள் நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன. இரண்டாம் நாள் நிகழ்ச்சி, இன்று காலை துவங்குகிறது. காலை, 9:00க்கு மஹாருத்ரயக்ஞம், உபநிஷத்பாராயணம், தம்பதி பூஜை துவங்கி, பகல், 12:00 மணி வரை நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு, போத்தனுார் ஸ்ரீகவுதம் பாகவதர் குழுவினரின் நாமசங்கீர்த்தன நிகழ்ச்சி நடக்கிறது.