39 நாட்களில் 60 கோடி ரூபாய் குறைவு சபரிமலைக்கு எதிராக கூட்டுச்சதி தேவசம்போர்டு தலைவர் தகவல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27டிச 2018 12:12
சபரிமலை: சபரிமலையில் நிலவி வரும் போராட்டம் மற்றும் 144 தடை உத்தரவால் பக்தர் களின் வருகை வெகுவாக குறைந்தது. இதனால், 39 நாட்களில் சபரிமலை வருமானம் 60 கோடி ரூபாய் குறைந்தது. பக்தர்கள் வருகை குறைவுக்கு சபரிமலைக்கு எதிரான கூட்டு சதியே காரணம் என தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் கூறினார்.
சன்னிதானத்தில் அவர் நிருபர்களிடம் கூறியது: பெருமழையால் பம்பையில் சேதம் ஏற்பட்டுள்ளதால் பக்தர்களின் முக்கிய தங்குமிடமாக நிலக்கல் மாற்றப்பட்டது. 2007 முதல் நிலக்கல் பற்றி பேசப்பட்டு வந்தாலும் முதன் முறையாக இப்போது செயல்படுத்தப் பட்டுள்ளது. நிலக்கல்லில் சில குறைபாடுகள் இருக்கிறது. அடுத்த சீசனுக்குள் சரி செய்யப் படும். 95 கோடி ரூபாய் செலவில் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.
சபரிமலையில் பெண்களை அனுமதிக்க கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தேவசம்போர்டு வாதாடியது. ஆனால் தீர்ப்பு மாறி வந்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவோம் என்று அரசு கூறியது. தேவசம்போர்டு கால அவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளது. இவ்விஷயத்தில் தேவசம்போர்டு தெளிவாக உள்ளது.சபரிமலைக்கு எதிராக மிகப்பெரிய கூட்டு சதி நடக்கிறது.
அரவணை பற்றி அடிப்படை ஆதாரம் இல்லாமல் புகார் செய்கின்றனர். கடந்த ஆண்டு 39 நாட்களில் 164.03 கோடி ரூபாய் வருமானம் வந்தது. இந்த ஆண்டு அது ரூ. 105.93 கோடியாக சரிந்துள்ளது. இந்த சீசனில் முதன் முறையாக 39வது நாளான 25ம் தேதி 2.01 கோடி ரூபாய் காணிக்கை கிடைத்தது. இது கடந்த ஆண்டை விட 13 லட்சம் ரூபாய் அதிகம்.அரவணை விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 70.68 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆனது. இந்த ஆண்டு ரூ.40.99 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது.
அப்பம் கடந்த ஆண்டு ரூ.12.19 கோடிக்கும், இந்த ஆண்டு ரூ.3.88 கோடி விற்பனை ஆனது. அரசியல் ரீதியாக சபரிமலையில் சதி நடைபெற்றுள்ளது. சபரிமலை வருமானத்தை நம்பி 1200க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளது, என்றார்.