பதிவு செய்த நாள்
27
டிச
2018
12:12
ரசிகர்களை வியக்க வைத்த ஸ்ரீரஞ்சனிகர்நாடிகாவும், ஸ்ரீ பார்த்தசாரதி சபாவும் இணைந்து, லான்கோர் எனும் பதாகையின் கீழ், இசை நிகழ்ச்சிகளை, திருவான்மியூர், ஸ்ரீ சங்கரா வித்யாஸ்ரமத்தின் பள்ளி அரங்கில் நடத்தி வருகிறது.
இதில்,நேற்று (டிசம்., 26ல்) இடம் பெற்ற ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலனின் கச்சேரி, இசை ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது.தீட்சிதரின், ராஜ கோபாலம் பஜேஹம் பாடலை பாடி, கச்சேரியை துவக்கினார் ரஞ்சனி. இதில், மிகப் பொருத்தமான இடத்தில், பாரிஜாத தருமூலம் என்ற வரிக்கு, ஸ்வரங்கள் அமைத்திருந்தார். இங்கு ஸரிக ஸா / பதஸ பா என்று சாஹித்யத்துடன் இணைந்ததை, ரசிகர்கள் பாராட்டினர்.
இதற்கு, வயலினில் ராஜீவ், மிருதங்கத்தில் ஜயச்சந்திர ராவ் மற்றும் கஞ்சிராவில சுனில் குமார் கொடுத்த ஒத்துழைப்பு மிக அபாரம்.தோடி ராகத்தில், தப்பி பிரதிகி என்ற தியாகராஜரின் பாடலையும், எந்நாளு திருகுதுனோ என்ற முத்தையா பாகவதரின், மந்தாரி ராகப் பாடலையும், ஆலாபனை ஏதுமில்லாமல் பாடினார்.
தொடர்ந்து பாபநாசம் சிவனின், சித்தம் இரங்காதேனய்யா எந்த பாடலின் இரண்டாவது வரியான சீறியேனிடம் அறுமாமுகம் என்பதை, மூன்று காலங்களிலும் பாடியது சிறப்பாக இருந்தது. பெண் பாடகர் ஒருவர், மேல் ஸ்தாயியில் இந்த அளவிற்கு, விட்டுப் பாடுவது, சமீப காலங்களில் யாரும் கேட்டதில்லை.. ஸ்ரீரஞ்சனியின் ஆபேரி ராக ஆலாபனையில் சிற்சில மின்னல்கள் போல் வந்த நன்கு வடிவமைக்கப்பட்ட பிருகாக்கள், ஹிந்துஸ்தானி போன்ற ஸ்வரங்களை அசைத்தல் முறை மற்றும் இன்பமான ஜாரு பிரயோகங்களையும், ரசிகர்கள் ரசித்தனர்.ஆபேரி ராகத்தில், தியாகராஜரின், நகுமோமு கனலேனி, ரஞ்சனி பாடிய போது, ரசிகர்களுக்கு, கொஞ்சும் சலங்கை திரைப்படத்தில் வரும், சிங்கார வேலனே என்ற பாடல் நினைவுக்கு வந்தது. இந்த ராகத்துக்கும், பாடலுக்கும், நாதஸ்வர வித்வான்கள் வாசிக்கும் பிடிகளை, குரலில் வரவழைத்தது இவரது சாதனை.எஸ் சிவகுமார்.