பதிவு செய்த நாள்
27
டிச
2018
12:12
பத்தணம்திட்டா, -விளம்பரம் தேடி, சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வரும் பெண்களுக்கு, பாதுகாப்பு வழங்க முடியாது என, கேரளா போலீஸ் தெரிவித்து உள்ளது.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள், அனைத்து வயது பெண்களை யும் அனுமதிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம், சமீபத்தில் உத்தரவிட்டது.இதையடுத்து, கேரளா, ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள், அய்யப்பன் கோவிலுக்கு செல்ல முயன்றனர்.அவர்களுக்கு, கேரள அரசு, போலீஸ் பாதுகாப்பு வழங்கியது. ஆனால், பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த பெண்கள், பாதி வழியில் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்நிலையில், சபரி மலை அய்யப்பன் கோவிலுக்கு வரும் பெண்களுக்கு, இனி பாதுகாப்பு வழங்க முடியாது என, கேரள போலீசார் தெரிவித்து உள்ளனர்.இது குறித்து, சன்னிதான சிறப்பு அதிகாரியான, கேரள, டி.ஜி.பி., லோக்நாத் பெஹ்ராவிடம், போலீசார் அறிக்கை தாக்கல் செய்தனர்.
அதில், கூறப்பட்டுஉள்ளதாவது:சபரிமலை கோவிலுக்கு வரும் பெண்களில் பெரும்பாலா னோர், தங்கள் விளம்பரத்துக்காகவே வருகின்றனர். இந்த பெண்களை, கோவிலுக்குள் அனுமதிப்பதால், விபரீத விளைவுகள் ஏற்படக்கூடும். எனவே, சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வரும், 50 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு, போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.