பதிவு செய்த நாள்
28
டிச
2018
11:12
ஆண்டிபட்டி: மாவூற்று வேலப்பர் கோயில் சுனையில் நீர் வற்றி வருவதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். தெப்பம்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது மாவூற்று வேலப்பர் கோயில். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முதல் தேதியில் நடைபெறும் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர். மாதாந்திர கார்த்திகை, அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்வர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் பயன்படுத்தி துாக்கி எரியும் பொருட்கள், குடிமகன்கள் பயன்படுத்திய காலி பாட்டில்கள், பாலிதீன் கழிவு பொருட்கள் போன்றவை வனப்பகுதியில் உள்ள கோயில் வளாகத்தின் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது.
ஓங்கி உயர்ந்த மரங்கள், செடிகொடிகள், பல்வேறு மூலிகைகள் கொண்ட இயற்கையான இடமாக இருந்த வேலப்பர் கோயில் வளாகம் கொஞ்சம் கொஞ்சமாக அதன் இயற்கை தன்மையை இழந்து வருகிறது. மருத மரங்களின் வேர் பகுதியில் இருந்து வரும் வற்றாத சுனையில் நீராடி வேலப்பரை வழிபடுவதால் தீராத நோய்கள் தீரும் என்பதும், மனக்கவலைகள் மறந்து புத்துணர்வு ஏற்படும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பக்தர்கள் புனிதமாக கருதும் சுனைநீர் இப்பகுதியில் உள்ள பள்ளத்தில் தேங்கி நிற்கும். பக்தர்கள் பலர் குளித்தாலும், தொடர்ந்து கொட்டி வந்த நீரால் பள்ளத்தில் தேங்கும் நீரும் சுத்தமாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளில் படிப்படியாக குறைந்து வந்த சுனை தற்போது வற்றி வருகிறது. லேசான நீர் கசிவு மட்டுமே தற்போது உள்ளது. இதனால் பக்தர்கள் சுனைநீரில் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளத்தில் தேங்கி நீரை தொடர்ந்து பயன்படுத்துவதால், அசுத்தமடைகிறது. வேலப்பர் கோயில் வளாகத்தில் வற்றிய சுனை பக்தர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி விட்டது. அடர்ந்த வனப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக தொடரும் வறட்சியும், இயற்கையான சூழலுக்கு மதிப்பு தராமல், கோயிலுக்கு வந்து செல்பவர்களின் செயல்பாடுகள்தான் பாதிப்புக்கான காரணம் என்று இப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.