பதிவு செய்த நாள்
29
டிச
2018
01:12
கோபி: பாரியூர் குண்டம் தேர்த்திருவிழா, பூச்சாட்டுதலை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் நேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பாரியூர், கொண்டத்துகாளியம்மன் கோவில் குண்டம் தேர்த்திருவிழா, பூச்சாட்டுதலுடன், நேற்று முன்தினம், துவங்கியது. அதுமுதல், பூமிதிக்கும் பக்தர்கள், விரதம் இருக்க துவங்கி உள்ளனர். பூச்சாட்டுதலை முன்னிட்டு, பாரியூர் வகையறா கோவில்களில், ஏராளமான பக்தர்கள் நேற்று காலை முதல் குவிந்தனர். பக்தர்கள் அனைவரும், குண்டத்தில் எலுமிச்சை மற்றும் நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். வரும், ஜனவரி, 10ல், அதிகாலை 7:30 மணிக்கு, அம்மன் சன்னதி எதிரே உள்ள, 60 அடி குண்டத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையாக பூமிதிப்பர். பக்தர்கள் வரிசையாக நிற்க வசதியாக, நூற்றுக்கணக்கான இரும்பு தடுப்புகள் நேற்று வந்தது. இதேபோல், ராஜகோபுரத்துக்கு வெளியே, போலீசார் கட்டுப்பாட்டு அறை, தற்காலிக கடைகள் அமைப்புக்கான ஏற்பாடுகள் நேற்று முதல் தீவிரமாக நடக்கிறது. பாரியூர் குண்டம் ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, கோபி ஆர்.டி.ஓ., அசோகன் தலைமையில், ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில், போலீசார், மின்சாரத்துறை, நகராட்சி, தீயணைப்பு துறை, சுகாதாரத்துறை, மருத்துவத்துறை, பொதுப்பணித்துறை என அதிகாரிகள் பங்கேற்றனர். குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, சுகாதாரத்தை மேம்படுத்துவது, வாகனங்கள் நிறுத்துமிடம் என ஆர்.டி.ஓ., அசோகன் ஆலோசனை வழங்கினார்.