பதிவு செய்த நாள்
02
ஜன
2019
05:01
கரூர்: ஆங்கில புத்தாண்டையொட்டி கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கோவில்கள், சர்ச்சுகளில் சிறப்பு வழிபாடு நடந்தது.
* கரூர் கல்யாண பசுபதீஸ்வரா கோவில், தான்தோன்றிமலை வெங்கடரமண கோவில், கரூர் மாரியம்மன் கோவில் மற்றும் ஐயப்பன் கோவில்களில், ஆங்கில புத்தாண்டையொட்டி, நேற்று (ஜனவரி., 1ல்)காலை முதல் சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிப்பட்டனர்.
*வடக்கு பிரதட்சணம் சாலையில் உள்ள புனித தெரசா ஆலயத்தில், நேற்று அதிகாலை, 12 மணிக்கு, பங்கு தந்தை ராயப்பன் தலைமையில் சிறப்பு பிரார்த்தனைக் கூட்டம் நடந்தது. அதேபோல், கரூர் (சி.எஸ்.ஐ.,) நகர ஹென்றி லிட்டில் நினைவாலயத்திலும், நேற்று (ஜனவரி., 1ல்) காலை சிறப்பு திருப்பலி நடந்தது. சிறப்பு பாடல்கள் பாடப்பட்டன.
*சிந்தலவாடி மாரியம்மன் கோவிலில், ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, அம்மனுக்கு தங்கக் காவசம் அணிவித்து, சிறப்பு பூஜை நடந்தது. சிந்தலவாடி, லாலாப்பேட்டை, மகிளிப்பட்டி, நந்தன்கோட்டை, கள்ளப்பள்ளி பகுதி மக்கள் குடும்பத்துடன் வந்து அம்மனை தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
*கருப்பத்தூர் சிம்மபுரீஸ்வரர் சிவன் கோவிலில், நேற்று (ஜனவரி., 1ல்) காலை சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. தொடர்ந்து, சுகந்தாளம்மனுக்கு சிறப்பு பூஜை, முருகனுக்கு அபிஷேகம் அலங்காரம் செய்து, சிறப்பு பூஜை நடந்தது. சுற்று வட்டார கிராம மக்கள் ஏராளமானோர் இதில் பங்கேற்றனர்.
*குளித்தலை கடம்பர்கோவில் கடம்பவனேஸ்வரர், நீலமேகபெருமாள் கோவில், மாரியம்மன் கோவில், ஐயப்பன், முருகன் கோவில்களில் சுவாமிக்கு அலங்காரம் செய்து, சிறப்பு வழிபாடு நடந்தது. அதிகாலையில் இருந்து இரவு வரை, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
*அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர், சிவாயம் சிவபுரீஸ்வரர் கோவில்களில், சுற்றுவட்டார பகுதி பக்தர்கள் மற்றும் கோவில் குடிப்பாட்டுக்காரர்கள் வழிபட்டனர்.
*லாலாப்பேட்டை கடைவீதி மாரியம்மன் கோவிலில், புத்தாண்டு முன்னிட்டு அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்து பூஜை நடந்தது.