பதிவு செய்த நாள்
03
ஜன
2019
11:01
சபரிமலையில், கோயில் நம்பிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், தெய்வ நம்பிக்கையில்லாத 50 வயதிற்குட்பட்ட இரண்டு பெண்களை தரிசிக்க ஏற்பாடு செய்த கேரள மார்க்சிஸ்ட் அரசிற்கும், முதல்வர் பினராயி விஜயனுக்கும் பக்தர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியது:
தீவிரவாத பின்னணி: அனு சந்திரமவுலி, தமிழக பா.ஜ., மாநில செயலாளர்: இந்த தகவலை கேட்டதும் நெஞ்சில் நெருப்பை கொட்டியது போன்ற மன வலியில் உள்ளேன். ஐயப்ப பக்தைகள் எல்லோருக்கும் ஏற்பட்டுள்ள உணர்வு இது. திருடிகள் போன்று ரகசியமாய் ஓடி ஒளிந்து தரிசனம் செய்ய அந்த பெண்களுக்கு கேரள போலீஸ் உதவியுள்ளது.கேரள முதல்வரின் கீழ்த்தரமான செயல் இது. ஹிந்துக்களை ஏமாளியாக நினைக்கிறார்.கோயிலின் ஐதீகத்தில் தலையிட இவர் யார். இவர் எல்லா மதத்திற்கும் முதல்வர். பிற மத விவகாரங்கள் தொடர்பாக, நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தினாரா. கேரளாவில் உள்ள 99 சதவீத பெண்கள் அவரது இந்த செயலை கண்டிப்பர். கூலிக்கு வேலைக்கு செல்வது போல அந்த பெண்கள் சபரிமலை செல்வதற்கு, தீவிரவாத பின்னணி உள்ளது. இந்தியாவிற்கு எதிரான சதி இது. இதனை விசாரிக்க வேண்டும்.
ஹிந்துக்களை புண்படுத்தும் விஜயன்: வி.சி.கோகுல் தாஸ், மதுரை: சபரிமலை விஷயத்தில் நீதிமன்ற உத்தரவை தீவிரமாக பின்பற்றும் முதல்வர் பினராயி விஜயன் ஏன் முல்லைப்பெரியாறு விஷயத்தில் பின்பற்றவில்லை. ஹிந்து மதத்தின் பாரம்பரிய பழக்கத்தை உடைத்து ஹிந்துக்கள் மனதை புண்படுத்துவதில் குறியாக இருக்கிறார் அந்த விஜயன். அதனால் தான் போலீஸ் பாதுகாப்புடன் வி.ஐ.பி., என்ற பெயரில் பெண்கள் சபரிமலைக்கு சென்றுள்ளனர். இதே போல் மற்ற மதங்களின் பாரம்பரிய பழக்கங்களில் தலையிடும் தைரியம் அந்த முதல்வருக்கு இருக்கிறதா.
உயிரில் கலந்த ஆன்மிக உணர்வு: வி.பி.மணிகண்டன், மதுரை: நீதிமன்றம் உத்தரவு என்பதால் பக்தர்கள் கைகள் கட்டப்பட்டுள்ளது. அறிந்தும் அறியாமல் மனிதர்கள் செய்யும் தவறை நீதான் சரி செய்ய வேண்டும் என ஐயனின் திருவடிகளை சரணடைவதை தவிர வேறு வழியில்லை. பக்தர்களின் உயிரில் கலந்த ஆன்மிக உணர்வை, கேரள அரசு மதித்து சபரியில் அமைதியை நிலைநாட்ட வேண்டும். பெண்கள் மீது வழக்குபதிய வேண்டும்
பி.சுந்தரவடிவேல், மாநிலத் துணை தலைவர், இந்து ஆலய பாதுகாப்பு குழு: இரண்டு பெண்கள் நேற்று இரவு மாறுவேடமிட்டு திருடர்கள் போல் சபரிமலைக்கு சென்றுள்ளனர். இதற்கு முழு ஆதரவு கொடுக்கும், இந்து வழிபாட்டு முறைகளை கொச்சைப்படுத்தும் கேரள அரசை வன்மையாக கண்டிக்கிறேன். இரண்டு பெண்கள் மீது மத அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய வேண்டும். இதற்கு துணை போன போலீசார், பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
வேதனை மேல் வேதனை: வி.பிரகாஷ்குமார், கோயில் மேல் சாந்தி, திண்டுக்கல்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் 50 வயதுக்குட்பட்ட இரு பெண்கள் நுழைந்த நிகழ்வு வேதனை அளிக்கிறது. காரணம், பத்து முதல் 50 வயது பெண்கள் தரிசனம் செய்வதை இக்கோயில் ஆகம விதி அனுமதிக்கவில்லை. தொன்று தொட்டு கடைபிடிக்கப்பட்டு வரும் இப்பாரம்பரியத்தை பாதியில் கைவிட முடியாது. ஒவ்வொரு கோயிலுக்கும் பாரம்பரியம், நம்பிக்கை உண்டு. சில கோயில்களில் ஆண்கள் நுழைய கூடாது. அதற்காக அங்கெல்லாம் ஆண்கள் போராடுவது சரியா.
நடை அடைத்தது நல்லதல்ல: ஆர்.சிவக்குமார், குருசாமி, தேனி: நம் சமுதாய முன்னோர்கள் ஏற்படுத்திய சாஸ்திர சம்பிரதாயங்களை பொய்யாக்க கேரள அரசு முனைப்பு காட்டியுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பு என்பதால் பக்தர்கள் எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளோம். இந்த நிலை மாற வேண்டும். நீதிமன்றம்தான் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இப்பிரச்னையில் நாங்கள் பக்தர்களை திரட்டி தொடர் போராட்டத்தில் ஈடுபடவும் தயங்க மாட்டோம்.
திருட சொன்னவன் குற்றவாளி: ஆர்.எஸ்.மோகன், குருசாமி, ராமநாதபுரம்: ஆன்மிகத்திற்கு தலைவன் ஆண்டவன். ஆன்மிகத்தை மறைத்து கோயிலுக்கு பெண்களை அழைத்து சென்றுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. விதியை மீறி செல்பவர்கள் அதற்கான பலனை கண்டிப்பாக அனுபவிப்பார்கள். கேரள அரசும், முதல்வரும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது, ஹிந்துக்களை அவமதிப்பது போல் உள்ளது. திருடனை விட திருட சொன்னவன் தான் குற்றவாளி. கேரள முதல்வர் இது போன்ற ஐதீகத்தை மீறும் செயல்களை கைவிட வேண்டும்.
யாருக்கும் உரிமை இல்லை: எஸ்.பாண்டி குருசாமி, சிவகங்கை: ஹிந்துக்கள் மனதை புண்படுத்தும் நோக்கில் இளம்பெண்களை சபரிமலைக்குள் அனுமதித்து
உள்ளனர். கேரள முதல்வரின் நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம். அதிகாரம் இருக்கிறது என்பதற்காக ஒரு மதத்தினரின் நம்பிக்கையை இழிவுபடுத்துவது மோசமான செயல். பெண்களை அனுமதித்ததால் கோயிலின் புனிதம் கெட்டுவிட்டது. ஆண்டாண்டு காலமாக கடைபிடிக்கும் ஐதீகத்தை மாற்ற, யாருக்கும் உரிமை கிடையாது. இச்செயலுக்கு முதல்வர் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
இது மிகப்பெரிய தாக்குதல்: யுவராஜ், ஐயப்ப பக்தர்கள் சங்க நிர்வாகி, ஸ்ரீவில்லிபுத்துார்: புனிதமான சபரிமலை ஐயப்பன் சன்னிதியில் பெண்களை அனுமதித்ததன் மூலம் ஹிந்துக்கள் மீதும், சம்பிரதாயங்கள் மீதும் கேரள கம்யூனிஸ்ட் அரசு மிகபெரிய தாக்குதலை நடத்தி உள்ளது. ஐயப்பன் மீதுள்ள பக்தி, அன்பு, புனிதத்தை அழிக்க கேரள முதல்வர் திட்டமிட்டு செயல்படுகிறார். இதன் மூலம் ஐயப்பனின் தண்டனையிலிருந்து அவர் தப்பமுடியாது. பாலின சமத்துவம் பேசும் அரசியல்வாதிகள் கிறிஸ்தவ பாதிரியார்களாக பெண்களை நியமிக்கவும் குரல் கொடுப்பார்களா.
தந்திரியை கண்டிப்பதா: பா.ஜ., செயலாளர் ஆவேசம்கேரள பா.ஜ., செயலாளர் ஷோபா சுரேந்திரன் கூறியதாவது:சபரிமலையில் ஐதீகம் மீறப்பட்ட போது, கோயில் நடை சாத்தியதற்கு மார்க்சிஸ்ட் செயலாளர் கண்டனம் தெரிவித்துள்ளார். தந்திரியை கண்டிக்க, கடவுள் நம்பிக்கை இல்லாத இவருக்கு என்ன அருகதை. இவரது மனைவியிடம் வேண்டுமென்றால், இவர்வீட்டின் வாசலை திறக்கவும் மூடவும் சொல்லட்டும். சபரிமலை கோயில் நடை திறப்பு, மூடல் தொடர்பான முடிவெடுக்க தந்திரிக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. இந்துக்களை வஞ்சித்த பிரனாயி விஜயனை கண்டித்து போராட்டம் தீவிரமாகும். இவ்வாறு கூறினார்.