பதிவு செய்த நாள்
03
ஜன
2019
12:01
நாமக்கல்: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, 1.08 லட்சம் வடை மாலை சார்த்தப்பட்டு, அபி ேஷகம் நடக்கிறது. அதற்காக, வடை தயாரிப்பு முழுவீச்சில் நடந்து வருகிறது. நாமக்கல்லில், பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு, ஒரே கல்லினால் உருவான, 18 அடி உயர ஆஞ்சநேயர், நின்ற நிலையில் சாந்த சொரூபியாக அருள்பாலிக்கிறார். ஆண்டு தோறும், மார்கழி, மூல நட்சத்திரத்தில், ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு விழா, வரும், 5ல் நடக்கிறது.
அன்று அதிகாலை, 5:00 மணிக்கு, சுவாமிக்கு, 1.08 லட்சம் வடைகள் கொண்ட மாலை சார்த்தப்பட்டு, சிறப்பு அபி ேஷகம், அலங்காரம் நடக்கிறது.
மதியம், 1:00 மணிக்கு, தங்கக் கசவத்தில் சுவாமி எழுந்தருளுகிறார். இதை முன்னிட்டு, கோவில் மண்டபத்தில், வடை தயாரிக்கும் பணி, நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு துவங்கியது. ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த, 32 பேர் கொண்ட குழுவினர், பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து, அக்குழுவைச் சேர்ந்த ரமேஷ் கூறியதாவது: ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு, 1.08 லட்சம் வடைகள் தயாரிக்கப்படுகின்றன. அதற்காக, 2,250 கிலோ உளுத்த மாவு, 650 கிலோ நல்லெண்ணெய், சீரகம், மிளகு, உப்பு ஆகியவை, தலா, 35 கிலோ பயன்படுத்தப்படுகிறது. மொத்தம், 18 அடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அதிகாலை, 5:00 மணி முதல், இரவு, 10:00 மணி வரை, பணி நடக்கும் பணி, நாளை (ஜன., 4), இரவு, 7:00 மணியுடன் வடை தயாரிப்பு முடிவடைகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.