மதுரை தெப்பக்குளம் தண்ணீர் இயற்கை முறையில் சுத்திகரிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜன 2019 12:01
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகத்தின்கீழ் உள்ள மாரியம்மன் தெப்பக்குளத்தில் தெப்பத்திருவிழாவையொட்டி தண்ணீர் நிரப்பப்பட்டு முதன்முறையாக இயற்கை முறையில் சுத்திகரிக்கும் பணி நடக்கிறது. இதற்காக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
தெப்பக்குளம் 950 அடி நீளம், 1,000 அடி அகலம் மற்றும் 17 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஆண்டு தோறும் தைப்பூச தெப்பத்திருவிழா மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் அலங்கார மிதவை சப்பரத்தில் எழுந்தருளுவர். சில ஆண்டுகளாக தண்ணீர் நிரப்ப முடியவில்லை. நிரந்தரமாக தண்ணீர் தேக்க பொதுப்பணித்துறை ஆய்வு நடத்தியது. இதற்காக மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தனியார் மண்ணியல் துறையினரின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. வைகையில் இருந்து தெப்பத்தில் 50 கன அடி நீர் சேமிக்கப்படுகிறது. தமிழக கோயில் தெப்பங்களில் முதல் முறையாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்பத்தில் தண்ணீர் சுத்திகரிக்கும் பணி நடக்கிறது. இதனால் தண்ணீர் தெளிவாகவும், துர்நாற்றம் இல்லாமலும் இருக்கிறது. வெட்டி வேர் வாசம்: பசுமை கோயில்கள் இயக்கம் தலைமை தொழில்நுட்ப ஆலோசகர் முனைவர் எம்.பி.ராஜசேகரன் கூறியதாவது: தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் அனுமதியின் பேரில் ‘செரிவூட்டப்பட்ட நுண்ணுயிர் கலவை’ (இன்ஸ்ட்டி பயோ ரெமிடியேஷன்) நாள் ஒன்றுக்கு 200 லிட்டர் தண்ணீரில் 500 முதல் ஒரு கிலோ வரை கலந்து தெப்பத்திற்கு வரும் தண்ணீரில் சொட்டு, சொட்டாக கலக்கும்படி அனுப்பப்படுகிறது. தண்ணீரை மாசுபடுத்தும் ‘பாஸ்பேட்’ மற்றும் ‘நைட்ரேட்’ ஆகியவற்றை கிரகித்து கொள்ளும் மற்றும் தண்ணீரில் வளரும் அற்புத மூலிகைகளான வெட்டி வேர், கல்வாழை ஆகிய செடிகளை 1200 எண்ணிக்கையில் மிதவை மூங்கில் படுக்கைகளில் வைத்து தெப்பத்தில் விடப்படும். இதனால் தெப்பத்தின் தண்ணீருக்கு இயற்கை முறையில் சுத்திகரிப்பு நடக்கிறது. இத்தொழில்நுட்பம் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அங்கீகரித்துள்ளது. இத்தொழில்நுட்பம் பாரம்பரியமானது. முன்பு வீடுகள் தோறும் பயன்படுத்தப்பட்டது. செலவு குறைவான இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிற கோயில் தெப்பங்களிலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.