பதிவு செய்த நாள்
03
ஜன
2019
12:01
சபரிமலை: சபரிமலை கோயில் ஐதீகத்தை தகர்த்து, எப்படியாவது ஒரு இளம்பெண்ணை தரிசிக்க வைக்க வேண்டும் என்ற கேரள மார்க்சிஸ்ட் முதல்வர் பினராய் விஜயனின் பிடிவாதம் வென்றது. போலீஸ் பாதுகாப்பு சூழ, அவர்கள் உதவியுடன் இரண்டு பெண்கள் நேற்று அதிகாலை, சபரிமலையில் தரிசனம் நடத்தினர். இதனால் ஒரு மணி நேரம் நடை அடைக்கப்பட்டு பரிகார பூஜை நடத்தப்பட்டது. அனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை உடனடியாக அமல்படுத்த மார்க்சிஸ்ட் அரசின் முதல்வர் பினராயி விஜயன் அதிக ஆர்வம் காட்டினார். பிறமதம் சார்ந்த விஷயங்களில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், அதனை கண்டுகொள்ளாதவர் அவர்.
கடவுள் இல்லை என்ற கொள்கையில் பிடிப்புள்ளவர், ஹிந்துக்களின் நம்பிக்கையை சீர்குலைப்பதில் மட்டும் ஆர்வம் காட்டியது பக்தர்களிடையே பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. பிரம்மச்சாரிகோலத்தில் ஐயப்பன் வீற்றிருக்கும் சபரிமலையில், 10 முதல் 50 வயது வரையுள்ள பெண்கள் செல்வது ஹிந்து ஐதீகத்துக்கு எதிரானது என்று கூறி பல போராட்டங்கள் நடந்தன. போராட்டம் வலுத்ததால் சபரிமலையில் மண்டல சீசன் என்று கூட பார்க்காமல், கோயில் வளாகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மண்டல சீசனில் பக்தர்கள் கூட்டம் குறைந்தது. எனினும் பக்தர்கள் எதிர்ப்பால், அந்த சீசனில் வந்த இளம்பெண்கள் யாரும் தரிசனம் நடத்த முடியவில்லை. பெண்கள் வருவதை எதிர்த்த பா.ஜ.-,–ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் சபரிமலைக்கு வரும் போது, கைது செய்யப்பட்டனர். சன்னிதானத்தில் சரண கோஷம் எழுப்பிய 300க்கும் மேற்பட்ட பக்தர்கள், கைது செய்யப்பட்டு, இருமுடிகட்டுடன் சிறைக்கு சென்றனர்.
பினராயி சர்வாதிகாரம்: மகரவிளக்கு சீசனில் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவதால், அப்போது பெண்கள் வருவதை தவிர்க்க வேண்டும்’ என்று பேசிய தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் ஆகியோர், முதல்வர் பினராயி விஜயனின் கடும் கோபத்துக்கு ஆளானார்கள். எனது அமைச்சரவையில் உள்ள யாரும் சபரிமலைக்கு பெண்கள் வர வேண்டாம் என்று கூறமாட்டார்கள்’ என்று சர்வாதிகாரத்துடன் சாடினார். மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனும் அமைச்சர்களை திட்டினார். இதை தொடந்து இருவரும் கட்சியும், முதல்வரும் சொல்வதுதான் சரி என்று அறிவித்து மன்னிப்பு கேட்டனர். இந்த சூழ்நிலையில் தான் நேற்று அதிகாலை பக்தர்களின் நெஞ்சில் குத்தியது போன்ற’ அந்த நிகழ்வு நடந்தது.
பினராய் உத்தரவுப்படி அவரது போலீசார், இரண்டு பெண்கள் உதவியுடன், ஆண்டாண்டுகாலமாக நிலவிய பக்தர்களின் நம்பிக்கையை தகர்த்தனர்.
யார் அந்த பெண்கள்: கோழிக்கோடு கொயிலாண்டியை சேர்ந்தவர் பிந்து 42. கண்ணுாரை சேர்ந்தவர் கனகதுர்கா 40. இவர்கள் இருவரும் கேரள அரசு ஊழியர்கள். கடந்த மாதம் 24ம் தேதி இருமுடியுடன் தரிசனத்துக்கு வந்த இவர்கள் சன்னிதானம் அருகே சந்திராங்கதன் ரோடு வரை வந்து விட்டனர். இங்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் போராட்டம் நடத்தியதால் சன்னிதானத்திற்கு வரவில்லை. அப்போது அவர்கள் நாங்கள் மீண்டும் வருவோம், போலீஸ் பாதுகாப்பு தரவேண்டும்’ என்ற நிபந்தனையுடன் திரும்பி சென்றனர். இந்நிலையில் பெண் உரிமையை நிலைநாட்டும் வகையில், முதல்வர் பினராய் ஏற்பாட்டில், நேற்று முன்தினம் கேரளாவில் லட்சக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு “பெண் சுவர்’ எழுப்பப்பட்டது. இதில் அனைவரது கவனமும் இருந்த நிலையில் நள்ளிரவில் பிந்துவும், கனகதுர்காவும் சபரிமலை வந்தனர். பம்பையில் இருந்து சீருடை அணியாத போலீஸ் பாதுகாப்புடன் மலையேறிய இவர்கள், அதிகாலை 3:00 மணிக்கு சன்னி தானம் வந்தனர். பின்னர் 3:30 மணிக்கு தேவசம்போர்டு ஊழியர்களுக்கான நுழைவு வாயில் வழியாக, கொடிமரம் அருகே சென்று அங்கிருந்து முன்வாசல் வழியாக சென்று ஐயப்பனை தரிசனம் செய்தனர். பின்னர் வேகமாக பம்பை திரும்பி விட்டனர். சன்னிதான பாதுகாப்பில் இருந்த உயரதிகாரிகளுக்கு கூட, இந்த பெண்கள் வரும் விஷயம் மறைக்கப்பட்டது. அந்த பெண்களே வீடியோவும் எடுத்தனர். ‘மப்டியில்’ வந்த போலீசாரும் வீடியோ எடுத்து, அதனை வெளியிட்டனர். ‘போலீஸ் பாதுகாப்புடன் பெண்கள் தரிசனம் செய்தனர்’என்று திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்து மகிழ்ச்சி அடைந்தார் பினராயி விஜயன்.
கோயிலில் பரிகார பூஜை: இது தொடர்பான வீடியோ வெளியான பின்னரே தந்திரி மற்றும் கோயில் நிர்வாகத்துக்கு, ‘வயது பெண்கள்’ வந்த விஷயம் தெரியவந்தது. உடனடியாக மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரியை அழைத்து, தந்திரி ஆலோசனை நடத்தினார். இதில் கோயில் நடை அடைத்து சுத்திகலசம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி காலை 10:30 மணிக்கு நெய்யபிஷேகம் நிறுத்தப்பட்டு பூஜாரிகள் வெளியேறினர். தொடர்ந்து மேல்சாந்தி கோயில் நடை அடைத்தார். சுத்திகலச பூஜை நடத்தப்பட்டு புண்ணியாகவாஜனம் தெளிக்கப்பட்ட பின்னர் 11:25-க்கு மீண்டும் நடை திறந்தது. பின்னர் வழக்கமான பூஜைகள் நடைபெற்றது. பினராயி விஜயனின் தீராத பிடிவாதம் காரணமாக, சபரிமலையில் ஆண்டாண்டு காலம் நிலை நின்ற ஹிந்து ஐதீகம் தகர்க்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக கேரளா முழுவதும் பெரும் போராட்டம் வெடித்தது. தேவசம்போர்டு அலுவலகங்கள் பூட்டப்பட்டன. தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் பயணங்களை ரத்து செய்து, வெளியே வரமுடியாமல் குருவாயூர்அரசு விடுதியில் தங்கியுள்ளார். பிந்து மற்றும் கனகதுர்கா வீடுகளில் பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கனகதுர்காவுக்கு கம்யூனிஸ்ட் உதவி: கனகதுர்காவின் சகோதரர் பரத்பூஷன் கூறியதாவது: எனது சகோதரி சபரிமலை தரிசனம் நடத்தியதில் பெரும் சதி உள்ளது. கடந்த சில நாட்களாக உள்ளூர் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் அவளுடன் அடிக்கடி பேசி வந்தனர். சில நாட்கள் அவர் கண்ணுாரில் மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. நாங்கள் அமைதியாக வாழ விரும்புபவர்கள். ஐயப்பனின் நம்பிக்கையை குலைத்து விட்டு, எங்கள் வீட்டிற்கு அவர் வரக்கூடாது. இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு அவரது கணவனும், குழந்தையும் வீட்டை விட்டு வெளியே போய் விட்டனர். இவ்வாறு கூறினார். தந்திரி நடை அடைத்து சுத்திகலசம் நடத்தியதை என்.எஸ். எஸ். ( நாயர் சர்வீஸ் சொசைட்டி) பொது செயலாளர் சுகுமாரன் நாயர் வரவேற்றார். தந்திரிக்கு நன்றி தெரிவித்த அவர், இந்த சம்பவம் உச்சநீதிமன்ற வழக்கை பாதிக்காது என்று கூறினார். ஆனால் நடை அடைத்தது கோர்ட் அவமதிப்பு என்றும், சபரிமலை பெண் தரிசனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கோடியேறி பாலகிருஷ்ணன் கூறினார்.