பதிவு செய்த நாள்
04
ஜன
2019
12:01
பழநி: தைப்பூசத்தை முன்னிட்டு, பழநி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள், காலை 10:00 மணி வரை நீடிக்கும் பனிப்பொழிவால் பாதிக்கப்படுகின்றனர்.
பழநி முருகன் கோயிலுக்கு சபரிமலை சீசன், தைப்பூசத் திருவிழா நெருங்குவதையொட்டி வெளி மாநில, மாவட்ட பக்தர்கள், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. மதுரை, சிவகங்கை, விருதுநகர், கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தற்போதே ஏராளமான பக்தர்கள் காவடிகள், பால்குடங்களுடன் பாதயாத்திரையாக வந்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில் மார்கழி மாத பனிப் பொழிவு கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது. காலை 10:00 மணி வரை குளிர்ந்த காற்று வீசுகிறது. இதனால் பாதயாத்திரை பக்தர்கள் நடுங்குகின்றனர். ரோப்கார், வின்ச் மூலம் மலைக்கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கொடைக்கானல் மலைத்தொடர், வயல்வெளிகளில் படர்ந்துள்ள பனிமூட்டத்தை கண்டு ரசிக்கின்றனர். மலைக்கோயில் வெளிப்பிரகாரத்தில் நின்றபடி, பனி மூட்டத்தில் மூழ்கிய கொடைக்கானல் மலை, வயல்வெளிகளை சுற்றுலா பயணிகள், பக்தர்கள் அலைபேசியில் ‘செல்பி’, மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.