சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூர் பவளநிறவல்லியம்மன் சமேத பூவேந்தியநாதர் கோயிலில் 74வது ஆண்டு தீர்த்தவாரி உற்ஸவ விழா கோலாகலமாக நடந்தது. இங்குள்ள சிவாலயம் பழமையும் புரதான சிறப்பும் பெற்றது.நேற்று முன்தினம் மாலை மூலவருக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு பூஜைகளும் நடந்தது. மாலையில் விவேகானந்தா கேந்திரம் சார்பில் 29வது ஆண்டுஉலக நன்மைக்கான 1008 விளக்கு பூஜை, மாங்கல்ய பூஜைகள் நடந்தது. இரவில் ஆன்மிக சொற்பொழிவும், வள்ளிதிருமணம் நாடகமும் நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு மாரியூர் கடற்கரையில் உற்ஸவ மூர்த்திகள் எழுந்தருளி, தீர்த்தவாரி நிகழ்ச்சியும், அன்னதானமும் நடந்தது. ஏற்பாடுகளை மகாசபை பிரதோஷ அன்னதானக்கமிட்டியினர், சமரச சன்மார்க்க சங்கத்தினர் செய்திருந்தனர்.