பதிவு செய்த நாள்
07
ஜன
2019
12:01
ஆர்.கே.பேட்டை:வெள்ளாத்துாரம்மன் கோவிலில் நடந்த மூன்று கால பூஜையில், மூன்று விதமான அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆர்.கே.பேட்டை அடுத்த, வெள்ளாத்துார் கிராமத்தில் உள்ளது வெள்ளாத்துாரம்மன் கோவில். இந்த கோவிலுக்கு ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதியைச் சேர்ந்த கிராமங்கள் மற்றும் ஆந்திர மாநிலம் நகரி, புத்துார், நாராயணவனம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.நித்திய பூஜைகளுடன், வெள்ளி, சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகளும் நடந்து வருகின்றன. ஓராண்டு காலமாக, அமாவாசை உற்சவமும் நடத்தப்பட்டு வருகிறது.நேற்று முன்தினம், மார்கழி அமாவாசையை ஒட்டி, அம்மனுக்கு மூன்று கால சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. காலை நேர பூஜையை, ஆர்.கே.பேட்டையை சேர்ந்த உபயதாரர்கள் முன்னின்று நடத்தினர்.மூலவருக்கான மாலை நேர பூஜை மற்றும் ஊஞ்சல் சேவையை, ஆந்திர மாநிலம், புத்துாரைச் சேர்ந்த பக்தர்களும் நடத்தினர்.இந்த சிறப்பு உற்சவத்தால், வெள்ளாத்துாரில், காலை முதல், இரவு வரை பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.