பதிவு செய்த நாள்
08
ஜன
2019
11:01
கோபி: பாரியூர் கொண்டத்துகாளியம்மன், குண்டம் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, நேற்று, 11 ஆயிரம் வாழைப்பழங்களில், பஞ்சாமிர்தம் தயாரித்து, அம்மனுக்கு, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டம், கோபி தாலுகா, பாரியூர் கொண்டத்துகாளியம்மன் கோவில், குண்டம் தேர்த்திருவிழா, கடந்த டிச., 27ல், பூச்சாட்டுதலுடன் துவங்கியது. அன்று முதல், பூமிதிக்கும் பக்தர்கள், விரதம் கடைபிடிக்க துவங்கினர். விழாவின், முக்கிய நிகழ்வாக, சந்தனக்காப்பு அலங்காரம், நேற்று நடந்தது. கோபி, புதுப்பாளையத்தின், நிரந்தர கட்டளைதாரர்கள், அபிஷேக பொருட்களுக்கு உண்டான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதற்காக, 11 ஆயிரம் பூவன் வாழைப்பழம், கல்கண்டு, மூன்று கிலோ, பேரிச்சம்பழம், இரண்டு கிலோ, தேன், மூன்று கிலோ, ஏலக்காய், 250 கிராம், உள்ளிட்ட, பொருட்களை கொண்டு, பஞ்சாமிர்தம் தயார் செய்தனர். இதேபோல், பால், 150 லி., தயிர், 50 லி., கரும்புச்சாறு, 100 லி., உள்ளிட்ட அபிஷேக பொருட்களை கொண்டு, நேற்று மதியம், 1:00 முதல், 3:00 மணி வரை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், அம்மன், சந்தனக்காப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு நேற்று அருள்பாலித்தார். இந்த விஷேச பூஜையில், ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்து சென்றனர்.