வேடசந்துார்: கிழக்கு மாரம்பாடி பெரிய அந்தோணியார் திருத்தலத்தில் தங்கத்தேர் வெள்ளோட்டம் நடந்தது. வேடசந்துார் ஒன்றியம் கிழக்கு மாரம்பாடியில் பெரிய அந்தோணியார் திருத்தலம் உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஜன.,8ந்தேதி கொடி பவனியுடன் துவங்கும் விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பர். ஜன.,16 ந்தேதி கொடியேற்றம், 17 ல் அங்கப்பிரதட்சனையும், இரவு 11:00 மணிக்கு தேரடி திருப்பலி மற்றும் வாண வேடிக்கையுடன் தேர்பவனியும் ஆரம்பமாகும். ஜன. 18 ந் தேதி ‘தங்கத்தேர்’ பவனியும் இரவு இன்னிசைக் கச்சேரியும் நடைபெறும். இந்த விழாவுக்கான தங்கத்தேர் வெள்ளோட்டம் ஞாயிறன்று நடந்தது. திண்டுக்கல் கத்தோலிக்க பிஷப் தாமஸ் பால்சாமி தலைமை வகித்தார். பாதிரியார்கள் அருள்ஜெயசீலன், அந்தோணிசாமி, ஊர் பிரமுகர் ஈசாக் முன்னிலை வகித்தனர். வெள்ளோட்டத்தில் ஊர் பெரிய தனக்காரர்கள் ஜான்போஸ், சேசுராஜ், அந்தோணிசாமி, சின்னவர் (எ)ஞானராஜ், மாரம்பாடி ஊராட்சி முன்னாள் தலைவர் ஜேசுதாஸ் மற்றும் தங்கத்தேர் தயாரிப்பு பணியாற்றிய மணவை குற்றாலம் பங்கிராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.