பதிவு செய்த நாள்
08
ஜன
2019
12:01
ராஜபாளையம்:அறநிலையத்துறையின் கீழ் உள்ள பல கோயில்களின் நிலை கேள்விக் குறியாக உள்ள நிலையில், பாழடைந்த கோயிலை புதுப்பித்து பக்தர்களால் மிக சிறப்பாக
வழிபாடு நடக்கும் கோயிலை கைப்பற்றும் அறநிலையதுறை அதிகாரிகளின் அடவடி பக்தர்களை வேதனைக்குள் ஆழ்த்தியுள்ளது.
ராஜபாளையம் மாயூரநாத சுவாமி கோயில் முன்புறம் 300 ஆண்டு பழமையான வழிவிடு விநாயகர் கோயில் இருந்தது. விக்கிரகம் சிதிலமடைந்து காணப்பட்டது. கோயில் முன்பு மெயின் ரோட்டில் பல்வேறு ஆக்கிரமிப்பு கடைகள் இருந்தன. இதை இந்து அறநிலைய துறை கண்டும் காணாது இருந்தது. ஆன்மிக, மருத்துவ, பொது சேவைகளில் ஈடுபட்டு வரும் தர்மாபுரம் மாப்பிள்ளை விநாயகர் கோவில் நற்பணி மன்றத்தினர் இப்பகுதி பக்தர்களின் கோரிக்கையை ஏற்று ஆக்கிரமிப்பாளர்களை அகற்றும் சட்டப்போராட்டத்தில் ஈடுபட்டனர். 10 ஆண்டுகளுக்கு மேலாக திருப்பணிகள் செய்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் குடமுழுக்கு செய்ததுடன், அர்ச்சகர்களை நியமித்து மூன்று கால பூஜைகள் நடத்தி வருகின்றனர். பக்தர்களும், எந்த வித கட்டணங்களும் இன்றி வழிபட்டு வருகின்றனர்.
பக்தர்கள் எதிர்ப்புஇந்நிலையில் அறநிலையத்துறையினர் கோயிலை பூட்டி தங்களிடம் ஒப்படைக்க கூறிவருகின்றனர். செப். 9 ல் உண்டியல் வைத்து இரவு காவலரை நியமித்து சாவியை ஒப்படைக்க கூறியதோடு, அர்ச்சனை சீட்டுகளை பெற்று வழிபட பக்தர்களை கட்டாயப்படுத்தி வருகின்றனர். இதனிடையே நேற்று (ஜன., 7ல்) கோயில் பொறுப்பு செயல் அலுவலர் இளங்கோ தலைமையிலான ஊழியர்கள் உண்டியல் பணம் எண்ணும் பணியை மேற்கொண்டனர்.
அப்போது பக்தர்கள் ,மாயூரநாத சுவாமி கோயிலுக்கு வரவேண்டிய பல்வேறு வருவாய் ஆதாரங்களை மீட்பதிலும், 30 ஆண்டுகளாக தெப்பத்திருவிழா நடத்த முடியாமல் சிதில மடைந்து காணப்படும் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய நாதன் கோயில் தெப்பத்தை புனரமைப்பதிலும் இந்த வேகத்தை காட்டலாமே என கேள்வி எழுப்பினர்.
அரசிடம் ஒப்படைக்கனும்இதற்கு பதலளித்த செயல் அலுவலர் இளங்கோ ,எந்த நிலையில் புனரமைக்கப்பட்டு வழிபாடு தொடர்ந்தாலும் கோயில் அறநிலையத்திற்கு சொந்தமானதே. முறையாக உண்டியல், அர்ச்சனை சீட்டுகள் வழங்கப்பட்டு அரசிடம் ஒப்படைக்க வேண்டும். தேவதானம் கோயில் தெப்பம் புனரமைப்பது தொடர்பாக தொல்லியல் துறையினர் பார்த்து
சென்றுள்ளனர்.
நீதி மன்றத்தால் அமைக்கப்பட்ட மண்டல குழு, உயர்நிலைக்குழு ஆய்வு பின்தான் புனரமைப்பு பணிகள் துவங்க முடியும்,என்றார். இடையூறு ஏற்படுத்துறாங்கமாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர் ராம்ராஜ், அறநிலைதுறையில் முறையான அனுமதி பெற்று பெரும் பொருட் செலவில் கோயிலில் குடமுழுக்கு நடத்தி நித்திய வழிபாடு தொடர்கிறது. புனரமைத்து நிர்வகித்து வரும் நற்பணி மன்றத்தினரை அறங்காவலராக நியமிக்க , கட்டணம் இன்றி வழிபாடு நடத்த நீதி மன்றத்திலும் வழக்கு நடந்து வருகிறது.
இந்நிலையில் அறநிலைதுறை அலுவலர்கள் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்துகின்றனர், என்றார்.