பதிவு செய்த நாள்
22
பிப்
2012
11:02
பெரம்பலூர்: எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு நடந்த கஜபூஜை, விடியவிடிய நடந்த நான்கு கால யாக வேள்வி, கோ பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் மகா சிவராத்திரி விழா நடந்தது. இதை முன்னிட்டு காகன்னை ஈஸ்வரர் கோவில் வளாகத்தில் மகா பஞ்சாட்சர யாக பாராயணம் நடந்தது. வேள்வி பூஜையை சேலம் ராசிபுரம் கந்தசாமி சிவாச்சாரியார் நடத்தி வைத்தார். மகா சிவராத்திரி விழாவுக்கு நாவலர் நெடுஞ்செழியன் இன்ஜினியரிங் கல்லூரி தலைவர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். எளம்பலூர் பஞ்சாயத்து தலைவர் ராமசாமி முன்னிலை வகித்தார். மகா சித்தர்கள் அறக்கட்டளை நிறுவன தலைவர் ராஜ்குமார் குருஜி மகா பஞ்சாட்சர வேள்வியை தொடங்கி வைத்தார். இதில் ஸ்ரீநடராஜ ஆனந்தபாபா, சிங்கப்பூர் குருகடாட்சம் மெய்யன்பர்கள், டாக்டர் ராஜாசிதம்பரம், எளம்பலூர் பஞ்சாயத்து துணை தலைவர் பெருமாள், கவுன்சிலர் சேகர் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை முதல் விடிய, விடிய நான்கு கால பூஜையும், இதைத்தொடர்ந்து அதிகாலை கோ பூஜையும் நடந்தது. கோ பூஜையை மகா சித்தர்கள் அறக்கட்டளை இணை நிறுவனர் ரோகிணி ராஜகுமார், இலங்கை ராதா, திட்டக்குடி தொழில்அதிபர் ராஜன் நடத்தி வைத்தனர். கஜ பூஜையை டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் கல்விக்குழு அறங்காவலர் பூங்கொடி நடத்தி வைத்தார். பின்னர் 200க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு எழுதுபொருட்கள், 500 சாதுக்கள், முதியோருக்கு கம்பளி போர்வை தானமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானமும் அளிக்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை மகாசித்தர்கள் அறக்கட்டளை சுந்தரமகாலிங்கம், தவசிநாதன், வீணை சுவாமி, கணேஷ்சாமி, இலங்கை மாரிசாமி, சாதுக்கள் சந்திராசாமி, முருகன், கோவிந்தராஜ், பசுமடம் ராம்ஜி மற்றும் பூமதி, சத்யா, தேவி, வல்லரசு, சேகர் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.