பதிவு செய்த நாள்
16
ஜன
2019
12:01
திருவண்ணாமலை: விஸ்வரூப கோதண்டராமர் சிலையை ஏற்றிச் சென்ற லாரியின் டயர்கள், 10 கி.மீ., செல்வதற்குள் வெடித்தன. கர்நாடக மாநிலம், ஈஜிபுரா பகுதியில், 108 அடி உயரத்தில் விஸ்வரூப கோதண்டராமர் சிலை அமைக்க அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். இதில் சிலை செய்ய, 64 அடி உயரம், 26 அடி அகலம் கொண்ட பாறை, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த, கொரக்கோட்டை மலையில், 350 டன் எடையில் வெட்டி எடுக்கப்பட்டது. இதில், முகம் மட்டும் வடிவமைக்கப்பட்ட நிலையில், கடந்த மாதம், 7ல், 240 டயர்கள் கொண்ட கார்கோ லாரியில் அங்கிருந்து புறப்பட்டது. மறுநாள், கிரிவலப்பாதையில் இருந்து புறப்பட்டு, செங்கம் அருகேவுள்ள அம்மாபாளையத்தை சென்றடைந்தது. 9ல், காலை, லாரி புறப்பட்ட சில நிமிடங்களில் குண்டும் குழியுமாக உள்ள சாலையால் ஒரே நேரத்தில், 15 டயர்களும் வெடித்தன. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து, மாற்று டயர்கள் கொண்டு வரப்பட்டு லாரியில் பொருத்தப்பட்டன. நேற்று முன்தினம் லாரி புறப்பட்ட நிலையில், 10 கி.மீ., செல்வதற்குள், 10 டயர்கள் மீண்டும் வெடித்தன. அதனால், மண்மலையில் லாரி நிறுத்தப்பட்டு, டயர்கள் மீண்டும் மாற்றப்பட்ட பின், புறப்பட்டு சென்றது. நேற்று மாலை, 4:00 மணிக்கு மேல், செங்கத்தை சிலை சென்றடைந்தது. இரவுக்குள் கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை சென்றடைய வாய்ப்புள்ளது.