பதிவு செய்த நாள்
16
ஜன
2019
12:01
காரைக்குடி: பழநி தைப்பூச விழாவிற்காக 450 ஆண்டுகளுக்கு மேலாக நகரத்தார் காவடி எடுத்து பாதயாத்திரையாக செல்கின்றனர். காரைக்குடி, கண்டனுார், தேவகோட்டையை சேர்ந்த 286 காவடிகள் நேற்று முன்தினம் குன்றக்குடியை அடைந்தது. நேற்று காலை அன்னதான மடத்தில் சிறப்பு பூஜை நடந்தது. காலை 9:00 மணிக்கு குன்றக்குடியிலிருந்து புறப்பட்டு மதியம் கண்டவராயன்பட்டியை அடைந்தது. இரவு மருதிப்பட்டியில் மகேஸ்வர பூஜை நடந்தது. ஜன., 20 ல் பழநி அன்னதான மடத்தில் பூஜை, ஜன., 21 ல் தைப்பூசத்தன்று இரண்டாம் நாள் பூஜை நடக்கின்றன. ஜன., 23 ல் மகத்தன்று காவடி செலுத்துகின்றனர். மீண்டும் பழநியில் இருந்து புறப்பட்டு, பாதயாத்திரையாக ஜன., 31 ல் குன்றக்குடியை அடைகின்றனர்.
காரைக்குடி சி.டி.பழனியப்பன் : பழநி முருகனை கூட்டாளியாக்கி நகரத்தார் வணிகம் செய்தனர். இதில் லாபம் வரவே, பழநிக்கு பாத யாத்திரை செல்ல துவங்கினர். ஒரு காவடியில் ஆரம்பித்தது, தற்போது பல்லாயிரமாக அதிகரித்தது. இந்த பாதயாத்திரை 450 ஆண்டுகளாக நடக்கிறது. நகரத்தார் குன்றக்குடியை மையமாக கொண்டு காவடி பாத யாத்திரையை துவங்குகின்றனர். கண்டனுார் சாமியாடி செட்டியார், காரைக்குடி அரண்மனை பொங்கல் பழனியப்ப செட்டியார் தலைமையில் செல்கின்றனர். நெற்குப்பை பூசாரி செட்டியார் காவடியும் இதனுடன் இணைந்தே செல்லும். காவடி எடுத்த பிறகு பூஜையை தவிர்த்து வேறு எதற்காகவும் இறக்கி வைப்பதில்லை, என்றார். இதேபோல் செட்டிநாட்டை சேர்ந்த நுாற்றுக்கணக்கான நாட்டார் காவடியுடன் பழநிக்கு பாதயாத்திரையாக சென்றனர்.