திருப்பரங்குன்றம்: தை தெப்பத்திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று (ஜன., 16ல்) தெப்பம் முட்டுத் தள்ளும் நிகழ்ச்சியும், தேரோட்டமும் நடந்தது. இன்று (ஜன., 17) தெப்பத்திருவிழா நடக்கிறது. சுவாமி, தெய்வானை சர்வ அலங்காரத்தில் ஜி.எஸ்.டி., ரோடு அருகேயுள்ள தெப்பக்குள கரையில் எழுந்தருளினர். சிவாச்சாரியார்கள் யாகம் வளர்த்து பூஜை நடத்தி மிதவை தெப்பத்தில் முகூர்த்தகால் கட்டப்பட்டது. மூங்கிலால் சுவாமி தெப்பத்தை முட்டுத் தள்ளும் நிகழ்ச்சி நடந்தது. 16 கால் மண்டபம் முன்பு அலங்கரிக்கப்பட்டிருந்த சிறிய வைரத் தேரில் சுவாமி, தெய்வானை, எழுந்தருளினர். பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க ரத வீதிகளில் தேரோட்டம் நடந்தது. இரவு சுவாமி தங்கமயில் வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. இன்று (ஜன., 17) காலை சுவாமி மிதவை தெப்பத்தில் எழுந்தருளி தெப்பத் திருவழா நடக்கிறது.