திண்டுக்கல்: பழநி பாதயாத்திரை பக்தர்களுக்காக சாலையோரங்களில் 3,661 விளக்குகள் பொருத்தப்பட்டு இருப்பதாக கலெக்டர் டி.ஜி.வினய் தெரிவித்தார். ஜன.21ல் பழநி தைப்பூச திருவிழா நடக்க உள்ளது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக பழநி வரத்துவங்கி உள்ளனர். அவர்களின் வசதிக்காக அனைத்து துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவர்கள் விபத்தில் சிக்காமல் இருக்க மாவட்ட எல்லை துவக்கத்தில் அனைவருக்கும் ஒளிரும் குச்சிகள் வழங்கப்படுகின்றன.
பக்தர்கள் நடக்கும் ரோடுகளில் வாகனங்களின் வேகம் குறைக்கப்பட்டுள்ளது. அறுபது ஊராட்சிகள் சார்பில் இருள் சூழ்ந்த சாலையோரங்களில் 3 ஆயிரத்து 661 மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆண், பெண்களுக்கு தனித்தனியாக 42 கழிப்பறைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. எழுபத்தைந்து இடங்களில் சிறிய குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் 275 நிரந்தர மற்றும் 202 தற்காலிக குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. சுகாதாரப்பணிக்காக 2, 935 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வழிகாட்டும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சாலையோரங்களில் பாதுகாப்பாக நடந்து செல்ல வேண்டும். பிளாஸ்டிக், பாலிதீன் பைகளை தவிர்க்க வேண்டும், என கலெக்டர் டி.ஜி.வினய் தெரிவித்தார்.