சபரிமலை:- ஆண் வேடமிட்டு சபரிமலைக்கு செல்ல முயன்ற கண்ணுார் பெண்கள் இருவர் நீலிமலையில் பக்தர்களால் தடுத்து திருப்பி அனுப்பப்பட்டனர். பெண்கள் விஷயத்தில் பிடிவாதத்தை விட மார்க்சிஸ்ட் அரசு மறுப்பதால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
சபரிமலையில் மகரவிளக்கு முடிந்து நடை அடைக்க இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ளது. பிந்து, கனகதுர்கா வந்து சென்ற பின்னர் சபரிமலையில் பொதுவாக அமைதி நிலவியது. ஆனால் மகரவிளக்கு முடிந்த அடுத்த நாள் முதல் பெண்கள் வர இருப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து பெண்கள் வருகை எதிர்ப்புக்குழுவை சேர்ந்த பக்தர்கள் பம்பை முதல் சன்னிதானம் வரை இரவு பகல் சுழற்சி முறையில் கண்காணித்தனர். நேற்று அதிகாலை 4:10 மணிக்கு எட்டு பேர் கொண்ட குழுவினர் மலை ஏறினார். நீலி மலை அடிவாரத்தில் வந்த போது எதிர்ப்புக்குழுவை சேர்ந்த சிலர் சந்தேகத்தின் பேரில் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது அந்த குழுவில் ஆண்களை போல கறுப்பு வேட்டி, சட்டை அணிந்திருந்த இரண்டு இளம் பெண்கள் இருந்தனர். இதை தொடர்ந்து அவர்களை விட மறுத்து எதிர்ப்புக்குழுவை சேர்ந்த ஐந்து பேர் போராட்டம் நடத்தினர். போலீசார் அவர்களை கைது செய்து அழைத்து சென்றனர்.
அடுத்து சில நிமிடங்களில் பெண்களை மலையேறு வதை தடுத்து நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து பஜனை போராட்டத்தில் ஈடுபட்டனர். நேரம் செல்ல செல்ல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடினர். பக்தர்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாக போலீஸ் அதிகாரிகள் வலுக்கட்டாயமாக பெண்களையும், அவர்களுடன் வந்தவர்களையும் திரும்பி பம்பைக்கு அழைத்து சென்றனர். அங்கு போலீஸ் வேனில் ஏற்றி பாதுகாப்பாக நிலக்கல் கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் சபரிமலையில் மீண்டும் பரபரப்பு தொற்றியுள்ளது.போலீசார் விசாரணையில், வேடமணிந்து வந்த பெண்கள் கண்ணுாரை சேர்ந்த ரேஷ்மா, ஷானிலா என்பதும், அவர்களுடன் வந்த ஆண்கள் கண்ணுார் மற்றும் கோழிக்கோட்டை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிந்தது. பிடிவாதத்தை கைவிட மறுத்து பெண்களை சபரிமலைக்கு அனுப்ப மார்க்சிஸ்ட் முதல்வர் பினராயி விஜயன் முயற்சிப்பது பக்தர்களை வேதனையடைய செய்துள்ளது.