பதிவு செய்த நாள்
23
பிப்
2012
11:02
கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி அருகே பழமைவாய்ந்த சிறுவங்கூர் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடந்து வருகின்றது.கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூர் கிராமத்தில் கி.பி.,5ம் நூற்றாண்டில் பல்லவர், சேதிராலர், வாணகோவரையர், ஓய்சாளர், மூன்றாம் ராஜராஜன், குலசேகரபாண்டியன், காலிங்கராயன் நாயனார் ஆகியோரால் கடந்த 1,500 ஆண்டுகளுக்கு முன்பு வரதநாயகி சமேத கரிவரதாராஜ பெருமாள் கோவில் கட்டப்பட்டுள்ளது. வாணாதியார் என்பவரால் இதற்கான ஆதார கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இக்கோவில் கருவறையில் பெருமாள் சுவாமி ஸ்ரீமன் நாராயணன் சங்கு பிரயோக சக்கரதாரியாகம், பச்சை வண்ணன், பக்தப்பிரியன், பாகவதலோலன், பரிமளப்பிரியன், முகமலர்ந்த மந்தஹாச புன்னகையுடன் மேற்கு திசையை பார்த்தவாறு நின்ற கோலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.கல்வராயன்மலையில் குறுநில மன்னர்கள் ஆண்ட காலத்தில் 35 அடி உயரம் கொண்ட ஸ்வதஸ்தகம்பம் கோவில் முன்பு நடுவதற்கு கேட் டதற்கு, மறுப்பு தெரிவித்த பின்பு பெய்த பலத்த மழையில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு கோமுகி ஆற்றில் அடித்து வரப்பட்டது மற்றும் 35 அடி உயரம் கொண்ட ஸ்வஸ்தகம்பம் இப்பகுதியில் வேறெங்கும் இல்லை என் பது இக்கோவிலில் தனி சிறப்பாகும்.பழமை வாய்ந்த இக்கோவிலின் மேல் தளம், மண்டபம், மதில் சுவர்கள் பாழாகாத வகையில் அவ்வப்போது சீரமைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கோவில் முற்றிலும் சிதலமடைந்ததால் கடந்த 2005ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் மூலவர் சன்னதி, தாயார் சன்னதி, கருடாழ்வார் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, லட்சுமி நாராயணர் பீடம் உள்ளிட்ட கோவிலின் அனைத்து பகுதிகளிலும் திருப்பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றது.பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு வரும் ஏப்ரல் 25ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கின்றது. கோவில் திருப்பணி ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.