பதிவு செய்த நாள்
19
ஜன
2019
12:01
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கற்குவியலில் கி.பி.,14ம் நுாற்றாண்டை சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. திருவாடானை அருகே திருத்தேர்வளையில் சேதமடைந்த பழைய சிவன் கோயிலில் அகற்றப்பட்ட கற்கள், கல் துாண்கள் கோயிலை சுற்றி போடப்பட்டுள்ளன. இவற்றை ஆய்வு செய்த ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் வே.ராஜகுரு, ஒருங்கிணைப்பாளர் மோ.விமல்ராஜ் ஆகியோர் பாண்டியர் கால கல்வெட்டு ஒன்றை கண்டுபிடித்தனர். தொல்லியல் ஆய்வாளர் ராஜகுரு கூறியதாவது: கருங்கற்களை கொண்டு கட்டப்பட்ட கோயில் விமானத்தின் கூம்பு வடிவ பகுதியில் இக்கல்வெட்டு இருந்துள்ளது. மன்னர் பெயர் இல்லை. 13 வது ஆட்சியாண்டில் வெளியிடப்பட்டுள்ளது. காளையார்கோவிலின் முந்தைய பெயரான திருக்கானபேர்கூற்றம் என்ற பெயர் கல்வெட்டில் இடம்பெற்றுள்ளது. மேலும் கல்வெட்டில், திருத்தேர்வளை கோயில் இறைவனுக்கு வழங்கப்பட்ட இத்தானத்தை காத்தவன் புண்ணியம் பெறக்கடவான்.
இவர்களின் ஸ்ரீபாதங்கள் திருத்தேர்வளை இறைவனால் காத்து ரட்சிக்கப்படவேணும். இதுக்கு விரோதம் செய்தால், மஹாதோஷத்தில் போவார், எனவும் சொல்லப்பட்டுள்ளது. இவ்வூர் அருகில் உள்ள ஆனந்துார் சிவன் கோயிலில் கி.பி., 1323ம் ஆண்டை சேர்ந்த சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் கல்வெட்டு உள்ளது. இதுவும் கி.பி.,14ம் நுாற்றாண்டை சேர்ந்தது. ஆனந்துார் கல்வெட்டில் திருத்தேர்வளையை சேர்ந்த வணக்கு செட்டியார் என்பவர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. பழமையான கோயில்களை அதன் பழமை மாறாமல், புதுப்பித்து பாதுகாக்க வேண்டும். இது போன்று உடைத்து போடப்பட்ட கற்களில் உள்ள வரலாற்று சாசனங்களை, அரசும், மக்களும் பாதுகாக்க வேண்டும், என்றார்.