பதிவு செய்த நாள்
21
ஜன
2019
04:01
வீரபாண்டி: தைப்பூச திருவிழாவையொட்டி, வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமணியர், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சென்னகேசவ பெருமாளுக்கு திருமணம் நடந்தது. சீரகாபாடி, திருமயிலாடகிரி, சுப்ரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழா, கடந்த, 15ல் முகூர்த்த கம்பம் நடுதலுடன் தொடங்கியது. நேற்று (ஜன., 20ல்) காலை, விநாயகருக்கு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து, மாப்பிளை அழைப்பு ஊர்வலம், மாரியம்மன் கோவிலில் தொடங்கி, மலைக்கோவிலை அடைந்தது.
மாங்கல்ய பூஜை முடிந்து, வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமணியர்; ஸ்ரீதேவி, பூதேவியருடன் சென்னகேசவ பெருமாளுக்கு, சிவாச்சாரியார்களால், திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. திரளான பக்தர்கள், தரிசனம் செய்தனர். மாலை, திருக்கோடி தீபம் ஏற்றப்பட்டு, மின்விளக்கு களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், மணக்கோலத்தில் சுவாமிகள் வீதி உலா வந்தனர். இன்று, (ஜன., 21ல்)தேரோட்டம் நடக்கிறது. அதற்காக, மாரியம்மன் கோவில் திடலில், விநாயகர், சுப்ரமணியர், பெருமாள் சுவாமிகளுக்கு, பாரம்பரிய முறைப்படி, மூங்கில், சவுக்கு, வைக்கோலால் தேர் கட்டும் பணி நடந்துவருகிறது.
மற்ற தேர்களை போல் இல்லாமல், வெறும் மூங்கில், சவுக்கு கட்டைகளை, வைக்கோலால் கட்டி, இரு மாட்டு வண்டிகளுக்கு மத்தியில், நீளமான தேக்கு மரத்தின் மேல் கட்டப்பட்ட தேரை இணைத்து, வடம் அமைத்து, பக்தர்கள் இழுத்துவருவர். இக்கோவில் பெருமாள் தேரில், செங்கோடம்பாளையம் மலைக்கோவிலிலிருந்து அழைத்து வரப்படும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்றாய பெருமாள், ஆண்டுதோறும் இங்கு வந்து தேரோட்டத்தில் கலந்து கொண்டு செல்வது மற்றொரு சிறப்பு. மாலை, 4:00 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில் மூன்று தேர்களில், விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்றாய பெருமாள் சுவாமிகளை எழுந்தருளச்செய்வர்.
இரவு, 7:00 மணிக்கு தேரோட்டம் நடக்கும். நாளை (ஜன., 22ல்) இரவு, சத்தாபரணம், நாளை மறுநாள் கொடி இறக்குதல், மஞ்சள் நீராட்டு வைபவத்துடன், விழா நிறைவடையும். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அலுவலர் கலைச்செல்வி, தக்கார் புனிதராஜ், ஊர்மக்கள் செய்துள்ளனர்.