பழநி: தைப்பூசத்தை முன்னிட்டு பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் பக்தர்களின் அரோகரா, சரண கோஷத்துடன் தைப்பூச தேரோட்டம் நடந்தது.
உலகப்புகழ்பெற்ற தைப்பூச திருவிழா பழநியில் ஜன.,15ல் முதல் 24 வரை நடக்கிறது. இதில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தில் சர்வ அலங்காரத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை 6:00 மணிக்கு முத்துக்குமார சுவாமி, வள்ளி, தெய்வானை, விநாயகர், அஸ்திர தேவருடன் சண்முகநதி தீர்த்தவாரிக்கு எழுந்தருளினர். கலசங்கள் வைத்து யாகபூஜை நடந்தது.காலை 11:00 மணிக்கு முத்துகுமாரசுவாமி, வள்ளி, தெய்வானை தேரில் எழுந்தருளினர். பின் மாலை 4:00 மணிக்கு தீபாராதனை நடந்தது.பின் மாலை 4.50 மணிக்கு பக்தர்களின் “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, பழநி ஆண்டவருக்கு அரோகரா” என சரணகோஷங்களுக்கிடையே மாலைதேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.