பதிவு செய்த நாள்
22
ஜன
2019
10:01
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. மாரியம்மன் தெப்பக்குளத்தில் அலங்கார மிதவை சப்பரத்தில் அம்மன், பிரியாவிடையுடன் எழுந்தருளி தெப்பத்தை காலை இருமுறையும், இரவு ஒரு முறையும் வலம் வந்து அருள் பாலித்தனர். இக்கோயிலின் முக்கிய விழாவான தெப்பத்திருவிழா ஜன.,10ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் தினமும் பல்வேறு வாகனங்கள், தங்கச்சப்பரத்தில் அம்மன், பிரியாவிடை எழுந்தருளினர். 12ம் நாள் திருவிழாவான தெப்பத்திருவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 5:30 மணிக்கு எழுந்தருளிய அம்மன், பிரியாவிடை பஞ்ச மூர்த்திகளுடன் சித்திரை வீதிகள் சுற்றி வந்து, அம்மன் சன்னதி, கீழமாசி வீதி, யானைக்கல், நெல்பேட்டை, முனிச்சாலை, காமராஜர் சாலை வழியாக பாண்டியன் - மாலதி திருக்கண் மண்டகப்படியாகி தெப்பக்குளம் சுற்றி முக்தீஸ்வரர் கோயிலில் எழுந்தருளினர்.
கோயிலில் இருந்து பஞ்ச மூர்த்திகள் காலை 10:05 மணிக்கு தெப்பக்குளத்தில் அலங்கார மிதவை சப்பரத்தில் எழுந்தருளினர். மஞ்சள் பட்டுடுத்தி சர்வ அலங்காரத்தில் அம்மனும், பிரியாவிடையான அம்மனுக்கு வாடாமல்லி நிற பட்டு, வைர கிரீடம், சுவாமிக்கு வெண்பட்டு, வைர கிரீடம் அணிவித்து சர்வ அலங்காரம் செய்விக்கப்பட்டது. தெப்பத்திற்குள் படகிலும், தெப்பத்திற்கு வெளியில் மிதவை சப்பரத்தின் வடங்களை பிடித்தும் சீர்பாதங்கள் இழுக்க தெப்ப உற்வசம் காலை 11:15 மணிக்கு துவங்கியது. 22 அடி உயர தெப்பத்தில் 11 அடி உயரம் தண்ணீர் நிரம்பி இருந்தது.
மன்னர் மண்டகப்படி: தெப்பத்தின் மைய மண்டபம் முன்பு மன்னர் திருமலை நாயக்கர் திருக்கண் மண்டகப்படியாக இருந்தது. அவரது காலத்திற்கு பின் மண்டகப்படி கோயில் நிர்வாகத்தின் கீழ் வந்தது. அலங்கார மிதவை சப்பரத்தில் அம்மன், பிரியாவிடை காலை இருமுறையும், இரவு 8:00 மணிக்கு ஒரு முறையும் தெப்பத்தை வலம் வந்து அருள்பாலித்தனர். தெப்பக்குளம் மின் அலங்காரத்தில் ஜொலித்தது. தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் ஏற்பாடுகளை செய்தனர்.