பதிவு செய்த நாள்
22
ஜன
2019
10:01
பிரயாக்ராஜ்: உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடந்து வரும், கும்ப மேளாவில் அமைந்துள்ள, ராம நாம வங்கி, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. உத்தர பிரதேசத்தில், முதல்வர், யோகி ஆதித்ய நாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்குள்ள, பிரயாக்ராஜில், கும்பமேளா நடந்து வருகிறது. இந்த கும்பமேளாவில் அமைந்துள்ள, ராம நாம வங்கி, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பிரயாக்ராஜை சேர்ந்த, அசுதோஷ் வர்ஷிணி, இந்த வங்கியை நிர்வகித்து வருகிறார். இவரது தாத்தாவான, தொழிலதிபர், ஈஸ்வர் சந்தர், இந்த வங்கியை துவக்கினார். தற்போது, மூன்றாவது தலைமுறையாக இந்த வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் சேருவோருக்கு, தனியாக கணக்கு துவக்கப்படும். அவர்களுக்கு, 30 பக்கங்கள் அடங்கிய, ஒரு புத்தகம் அளிக்கப்படும். அதில், ராம நாமத்தை எழுத வேண்டும்.
இவ்வாறு அதிக அளவில், ராம நாமத்தை எழுதி, இந்த வங்கியில் சமர்ப்பிக்கலாம். அது, கணக்கில் இருப்பு வைக்கப்படும். வங்கிகளில் வழங்குவதுபோல், இதற்காக, பாஸ்புக் அளிக்கப்படுகிறது. இது குறித்து, அசுதோஷ் வர்ஷிணி கூறியதாவது:எந்த மதத்தைச் சேர்ந்தவரும், இந்த, ராம நாம வங்கியில் சேரலாம். எங்களது வங்கி, இதுவரை, ஒன்பது கும்பமேளாவை பார்த்துள்ளது. வங்கியில், 70 - 80 ஆண்டுகளாக உறுப்பினர்களாக உள்ளவர்கள், தற்போதும், ராம நாமத்தை எழுதி, எங்களிடம் அளித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.