பதிவு செய்த நாள்
22
ஜன
2019
02:01
செஞ்சி:தேவதானம்பேட்டை தண்டாயுதபாணி கோவிலில் நடந்த தைப்பூச விழாவில் ஏராள மான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்தி கடன் செலுத்தினர். செஞ்சி அருகே உள்ள தேவதானம்பேட்டை தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நேற்று (ஜன., 21ல்) தைப்பூச விழா நடந்தது.
இதை முன்னிட்டு கடந்த 11 ம் தேதி கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து 9 நாட்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமும், தீபாராதனை நடந்தது. நேற்று (ஜன., 21ல்) காலை 5:00 மணிக்கு தண்டாயுதபாணி சுவாமிக்கு மகா அபிஷேகமும், அலங்காரம் செய்தனர். 8:00 மணிக்கு தீபாராதனையும், பகல் 12:00 மணிக்கு காவடி அபிஷேகம், அலகு குத்தி தேர் இழுத்தல், காவடி ஊர்வலம் நடந்தது. மதியம் 1:00 மணிக்கு தண்டாயுதபாணி சுவாமிக்கு பால் அபிஷேகமும், விபூதி அலங்காரமும் செய்தனர். மாலை 3:00 மணிக்கு கோவில் குருக்கல் அருட்பெருஞ் ஜோதி சாமியின் மார்பின் மீது மாவு இடித்தல். மிளகாய் சாந்து அபிஷேகம் நடந்தது. மாலை 4:00 மணிக்கு செடல் சுற்றுதலும், தொடர்ந்து தீமிதி விழாவும், தேர் பவனியும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.