பதிவு செய்த நாள்
26
ஜன
2019
01:01
கண்டமங்கலம்: கண்டமங்கலம் அருகே உள்ள சின்னபாபுசமுத்திரம் கிராமத்தில் அங்காளபரமேஸ்வரி சமேத ஸ்ரீபெரியாண்டவர் கோவில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது.கண்டமங்கலம் அடுத்த சின்னபாபுசமுத்திரம் கிராமத்தில், மகான் படேசாகிப் கோவில் மற்றும் திரவுபதையம்மன் கோவில் அருகில் நீண்டகாலமாக புற்றுகோவிலாக இருந்து வந்த பெரியாண்டவர், பெரியாண்டச்சி அம்மன் கோவில் புதிதாக கட்டப்பட்டது. சிற்ப வேலைபாடுகளுடன் மகாகணபதி, முருகப்பெருமான், பாவாடைராயன், பெரியாண்டச்சி அம்மன், அங்காளபரமேஸ்வரி அம்மன் மற்றும் பெரியாண்டவர் சன்னதி அமைக்கப்பட்டது. இக்கோவில் கும்பாபிேஷக விழா கடந்த 23ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. நேற்று முன்தினம் மாலை 3.00 மணிக்கு முதல் கால யாகசாலை தொடங்கி இரவு 9.00 மணிக்கு நிறைவுபெற்றது. நேற்று காலை 5.00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை ஆரம்பமானது 7.00 மணிக்கு 108 மூலிகை மற்றும் திரவியங்கள் அடங்கிய புனிதநீர் ஊர்வலம் நடந்தது. காலை 9.45 மணிக்கு மகா கும்பங்கள் பறப்பாடு, மஹாதீபாராதனை மற்றும் புஷ்பார்ச்சனை நடந்தது. காலை 10.00 மணிக்கு ஆகம அலங்கார தற்புருஷசிவம், ஜோதிட வித்வான் மோகன்ராஜ் ஐயர் தலைமையில் மகா கணபதி, சுப்பிரமணியர், பாவாடைராயன், பெரியாண்டச்சி அம்மன், பெரியாண்டவர், அங்காளபரமேஸ்வரி விமானம் மற்றும் விக்ரகங்களுக்கு மகா கும்பாபிேஷகம் நடந்தது.