பதிவு செய்த நாள்
29
ஜன
2019
11:01
மயிலம்: மயிலம் முருகர் கோவில் திருப்படி விழாவில் திருவிளக்கு பூஜை நடந்தது.மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமி கோவில் திருப்படி விழா நேற்று நடந்தது. காலை 5:30 மணிக்கு மலையடிவாரத்திலுள்ள அக்னி குளக்கரையில் உள்ள சுந்தரவிநாயகர் கோவில் வழிபாட்டிற்கு பின்னர் திருப்படி விழாக் குழுவினர் பால், பன்னீர், புஷ்ப காவடிகளுடன் மலைக்கோவிலுக்கு வந்தனர்.முன்னதாக காலை 7:00 மணிக்கு கோவில் திருப்படிகளை பக்தர்கள் துாய்மை செய்து மஞ்சள், குங்குமம் வைத்து படிக்குபடி சூடம் ஏற்றி வழிபட்டனர்.
காலை 8:00 மணிக்கு நடந்த ஆன்மிக கூட்டத்திற்கு மயிலம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமை தாங்கி ஆசியுரை வழங்கினார். மயிலம் தமிழ் கல்லுாரி முன்னாள் முதல்வர் திருநாவுக்கரசுராமசிவகுமார், தமிழ் துணை முதல்வர் திருநாவுக்கரசு தினஷே்குமார் ஆகியோர் சொற்பொழிவாற்றினர்.கோவில் மண்டபத்தில் காலை 9:00 மணிக்கு உலக அமைதிக்காக 501 பெண்கள் திருவிளக்கு வழிபாடு செய்தனர்.
கோவில் வளாகத்திலுள்ள விநாயகர், பாலசித்தர், வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. காலை 11:00 மணிக்கு மூலவருக்கு மகா தீபாரானை, வழிபாட்டிற்கு பின்னர் பகல் 12:00 மணிக்கு மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.விழுப்புரம் வள்ளியம்மை திருப்புகழ் சபை, கண்டாச்சிபுரம் கோலாட்ட குழுவினர், வளையாம்பட்டு, மேலமங்கலம் பெரும்பாக்கம், சென்னகுணம் ஆகிய ஊர்களிலிருந்து பஜனை குழுவினர் பக்தி பாடல்களை பாடினர். இரவு 9:00 மணிக்கு உற்சவர் கிரிவல காட்சி நடந்தது.திருப்படி விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், கல்லுாரி செயலாளர் ராஜீவ்குமார் ராஜேந்திரன் செய்திருந்தனர்.