பழநி: தமிழகத்தின் முதன்மை ஆன்மிக தலமான பழநி முருகன் கோயில் மலையில் போகர் சித்தரால் நவபாஷானங்களால் வடிவமைக்கப்பட்ட முருகன், ஞான குருவாக, ஆண்டியாக வும், ராஜ அலங்காரத்திலும் காட்சியளித்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இந்த மலையில் எண்ணற்ற மூலிகைகள் உள்ளன. இதனால் தான் அதியம் அனேகமுற்ற பழநிமலை என்கின்றனர். மேலும் குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான். அங்கே குறவள்ளித் தாயாரும் உடனிருப்பார் என்பது ஆன்றோர் வாக்கு.
அப்படித்தான் பழநியிலும் வள்ளித் தாயார் அமர்ந்து வரமருள்கிறார். பழநி மலையின் யானைப்பாதை வழியில் பலநூறு ஆண்டுகளாக வற்றாத வள்ளிசுனை இருக்குதுங்க. இது புனித சுனை. அதனருகேதான் வள்ளித் தாயார் மரத்தடியில் நாகர்களுடன் தனி சன்னதியில் அமர்ந்து அருள்பாலிக்கிறார். அங்கு சிவலிங்கம், விநாயகர் சிலைகளும் உள்ளன.
நாகதோஷம், திருமணத்தடை, குழந்தை பாக்கியம் பெற பக்தர்கள் அபிஷேகம், அர்ச்சனை செய்தும், மரத்தில் தொட்டில் கட்டியும் வழிபடுகின்றனர். பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை வள்ளிசுனையில் தீர்த்தம் பெற்று பக்தர்கள் தலையில் தெளித்துக்கொள்ள அனுமதிக்கப் பட்டனர். தற்போது தீர்த்த நீரின் தூய்மைகருதி சுனைப்பகுதிக்கு செல்ல அனுமதியில்லை.
அப்பகுதியை புதுப்பித்து சுற்றிலும் கம்பிவேலிகள் அமைத்து, முருகன் திருக்கல்யாண கோல சுதைகள் வைக்கப்பட்டுள்ளன. மலையேறும் பக்தர்கள் தவறாமல் வள்ளியை வணங்கிச் செல்கின்றனர். அப்புறம் என்னங்க... நீங்களும் பழநிக்கு வரும்போது யானைப்பாதையில் உள்ள வள்ளித்தாயாரை வணங்கி வாழ்வில் வளம்பெறலாம் தானே.