பதிவு செய்த நாள்
02
பிப்
2019
01:02
தேனி: ""ஆற்றங்கரை ஓரத்திலே அரசமரத்தடியிலே வீற்றிருக்கும் பிள்ளையார் வினைகள் தீர்க்கும் பிள்ளையார் என கிராமங்களில் நீர்நிலை பகுதிகள் மட்டுமில்லாது, ஒவ்வொரு தெருக்களிலும் மரத்தடியில் விநாயகர் வீற்றிருக்கிறார். அவரை வழிபட்டு தான், அனைத்து செயல்களை செய்ய துவங்கும் வழக்கமும் பெரும்பாலானவர்களிடம் உள்ளது. இத்தகையை சூழலில் மிகப்பழமையான அரசமரத்தடி சக்தி விநாயகர் ஆதிப்பட்டியின் அடையாளமாக உள்ளார்.
கிராம மக்கள் கூறியதாவது: கடல் போல காட்சியளிக்கும் பூதிப்புரம் ராஜபூபாளம் கண்மாயில் இருந்து வரும் ஓடையின் கரையில் தான் இந்த அரசமரம் வளர்ந்தது. எங்களின் முன்னோர் மரத்தின் அடியில் விநாயகரின் சிலையை நிறுவி வழிபட துவங்கினர். பழமையான இம் மரத்தின் கிளை கடுமையான மழை காற்றில் ஓடிந்தாலும், மரத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. காலப்போக்கில் ஓடையும் மறைந்து, பூதிப்புரம் செல்லும் மெயின் ரோடாக மாறிவிட்டது.
போக்குவரத்து வசதி அதிகமில்லாத காலங்களில் மஞ்சிநாயக்கன்பட்டி, வலையப்பட்டி, வாழையாத்துப்பட்டி, கெப்புரெங்கன்பட்டி மக்கள் தேனிக்கு கால்நடையாகவோ, மாட்டு வண்டியிலோ செல்லும் போது, சக்திவிநாயகரை வழிபட்டு தான் பயணத்தை துவங்குவர். வெளியூர் பயணிப்போரும் வழிபட்டே செல்வர்.
குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு, உடல் நலம் உள்ளிடவைக்கு வேண்டி கொண்டு மக்கள் விநாயகரை வழிபடுகின்றனர். அது நிறைவேறுகிறது. புரட்டாசி பொங்கல், விநாயகர் சதுர்த்தி, தைப்பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளில் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடக்கும். கிராம கமிட்டி சார்பில் இக்கோயில் பராமரிக்கப்பட்டு வருகிறது, என்றனர்.