தேவிபட்டினம்: தை அமாவாசையை முன்னிட்டு தேவிப்பட்டினம் நவபாஷாணத்தில் பக்தர்கள் நவக்கிரகங்களை சுற்றி வந்து முன்னோருக்கு தர்ப்பணம் செய்தனர். முன்னதாக எள், அரிசி, பழங்கள் உள்ளிட்ட பண்டங்களை முன்னோருக்கு படையல் இட்டு வழிபாடு செய்து நவகிரகங்களுக்கு சிறப்புஅபிேஷக ஆராதனைகள் செய்தனர். பக்தர்கள் நவபாஷாண கடலில் புனித நீராடியாதால் இந்து அறநிலையதுறை சார்பில் பேரிகார்டுகள் அமைத்து பக்தர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பொன்குளத்தில் உள்ள விக்னேஷ்வர பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு கோயிலுக்கு 2.18 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய வேலு ஆசாரியின் 122 வது ஜெயந்தியும், 30 வது குருபூஜையும் தை அமாவாசையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் தீபாராதனையும், பின் அன்னதானமும் நடந்தது. ஏற்பாடுகளை டிரஸ்டி பி.வீரசேகர் மற்றும் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
தொண்டி: தொண்டி அருகே தீர்த்தாண்டதானத்தில் சகலதீர்த்தேஸ்வரர் கோயில் உள்ளது. ராமபிரான் சீதையை தேடி இவ்வழியே சென்ற போது இங்கு இளைப்பாறினார். தாகம் ஏற்படவே அகத்தியர் தீர்த்தம் உண்டாக்கி கொடுத்ததால் தீர்த்தாண்டதானம் என பெயர் பெற்றதாக ஸ்தல வரலாறு உள்ளது. நேற்று தை மாத அமாவாசையை முன்னிட்டு அங்குள்ள கடலில் ஏராளமானோர் புனித நீராடினார்கள். சகலதீர்த்தேஸ்வரர், சவுந்தரநாயகி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்பு சுவாமி வீதி உலா நடந்தது.
சேதுக்கரை: சேதுக்கரை கடற்கரையில் தை அமாவாசையை முன்னிட்டு அதிகாலை 4:00 மணி முதல் பக்தர்கள் புனித நீராடி முன்னோருக்கு தர்ப்பணம், திதி உள்ளிட்ட சங்கல்ப பூஜைகளை செய்தனர். வெளி மாவட்டங்களில் இருந்தும், சுற்று வட்டாரப்பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் குடும்பத்துடன் வந்திருந்து பித்ரு கடன் பூஜைகளை செய்து வழிபாடு செய்தனர். கடற்கரை அருகே உள்ள சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சனேயர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சேதுக்கரை செல்லும் வழியில் உள்ள அகத்தியர், வெள்ளைப்பிள்ளையார் கோயிலின் முன்பு சிதறு தேங்காய் உடைத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
*திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் கோயிலில் விசேஷ திருமஞ்சனம் நடந்தது. நாலாயிர திவ்ய பிரபந்தப்பாடல்கள் பாடப்பட்டது. சேதுக்கரை வந்த ஏராளமான பக்தர்கள் திருப்புல்லாணி பெருமாள் கோயிலுக்கு சென்று நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர்.
* சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் சமேத பவளநிறவல்லியம்மன் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மாரியூர் கடற்கரையில் புனிதநீராடி தர்ப்பண பூஜைகளை நிறைவேற்றினர். கோயிலில் அன்பர் குருமுருகா சார்பில் அன்னதானம், குளிர்பானங்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பிரதோஷ அன்னதானக்கமிட்டியினர் செய்திருந்தனார். * மூக்கையூரில் உள்ள கடலில் புனித நீராடிய திதி, சங்கல்ப பூஜைகளை செய்து வழிபட்டனர்.