பதிவு செய்த நாள்
05
பிப்
2019
12:02
சென்னை:ஹிந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியின் நிறைவு நாளான நேற்று, திருப்பதி தேவஸ்தானம் சார்பில், ஸ்ரீனிவாச திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.ஹிந்து ஆன்மிக சேவை மையம், பண்பு மற்றும் கலாசார பயிற்சி முனைவு அறக்கட்டளை ஆகியவை இணைந்து, 10வது ஹிந்து ஆன்மிக, சேவை கண்காட்சியை, வேளச்சேரி, குருநானக் கல்லுாரியில் நடத்தின.
ஜன., 29ம் தேதி முதல், ஜீவராசிகளை பேணுதல்; பெற்றோர், ஆசிரியர்களை வணங்குதல்; பெண்மையை போற்றுதல்; சுற்றுச்சூழலை பராமரித்தல்; நாட்டுப்பற்றை வளர்த்தல் ஆகிய பண்புகளை வலியுறுத்தும் வகையில், கண்காட்சி நடத்தப்பட்டது.கண்காட்சியின் நிறைவு நாளான நேற்று, வனம் மற்றும் வன விலங்குகளை பாதுகாத்தல் என்ற தலைப்பில், நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் பங்கேற்ற ஏராளமான, மாணவ - மாணவியர், விருக்ஷ வந்தனம், நாக வந்தனத்தில் ஈடுபட்டனர்.இதை தொடர்ந்து, மறவர் சங்கத்தினர் சார்பில், சிலம்பம், வாள் வீச்சு நிகழ்ச்சி நடந்தது. பின், ஆந்திர மாநிலத்தின் பல்வேறு சமுதாயத்தினர் நடத்திய, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன.நேற்று மாலை, 6:00 மணிக்கு, திருமலை, திருப்பதி தேவஸ்தானம் சார்பில், ஸ்ரீனிவாச கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அங்குரார்ப்பணம், ஸ்தல சுத்தி, புண்யாவதனம், சங்கல்பம் நடந்தது.தொடர்ந்து மாங்கல்ய தாரணம், அட்சதை ஆசீர்வாதம் நடந்தன. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்ரீனிவாச பெருமாளின் அருளைப் பெற்றனர்.15 லட்சம் பேர்!ஹிந்து ஆன்மிக, சேவை கண்காட்சி குறித்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், பிரமாண்டமான அளவில், விழிப்புணர்வு செய்யப்பட்டது. மேலும், நுாற்றுச்கணக்கான பள்ளிகளைச் சேர்ந்த, பல்லாயிரக்கணக்கான, மாணவ - மாணவியரும் பங்கேற்றனர்.இதன் பலனாக, இந்த ஆண்டு, ஆறு நாட்கள் நடந்த கண்காட்சியை, 15 லட்சம் பேர் கண்டுகளித்தனர். வார விடுமுறையான, நேற்று முன்தினம், ஒரே நாளில், ஒன்பது லட்சம் பேர் கண்காட்சியை கண்டுகளித்தனர்.