பதிவு செய்த நாள்
05
பிப்
2019
12:02
தை அமாவாசையையொட்டி ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலிலும், குமரி முக்கடல் சங்கமத்திலும் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். திங்கட்கிழமை, திருவோண நட்சத்திரம், அமாவாசை இணைந்து, 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகோதய அமாவாசை வரும். இந்நாளில், பக்தர்கள் தர்ப்பணம் பூஜை செய்து, புனித நீராடினால் முன்னோர்கள் ஆன்மா சாந்தியடையும் என்பது நம்பிக்கை.நேற்று மகோதய தை அமாவாசை என்பதால், ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் கோவிலுக்கு வந்தனர். அக்னி தீர்த்த கடற்கரையில் திதி பூஜை, தர்ப்பணம் செய்து, கடலில் புனித நீராடினர்.பின், கோவிலுக்குள் உள்ள 22, தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். காலை, 9:00 மணிக்கு மேல், கோவிலில் இருந்து தங்க ரிஷப வாகனத்தில் பிரியாவிடையுடன் சுவாமி, அம்மன், தங்க கருட வாகனத்தில் ஸ்ரீ ராமர், சீதை, லட்சுமணர் புறப்பாடாகி அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளி தீர்த்தவாரி நடந்தது. முக்கடல் சங்கமத்தில் கன்னியாகுமரி முக்கடல் சங்கமிக்கும் கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் கன்னியாகுமரியில் குவிந்தனர்.அதிகாலையிலேயே திரண்ட பக்தர்கள், வேத விற்பன்னர்கள் மூலம், முன்னோருக்கு தர்ப்பணம் செய்தனர். பின், புனித நீராடி கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவில், பகவதி அம்மன் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தனர்.