பதிவு செய்த நாள்
05
பிப்
2019
02:02
காரைக்குடி: இயல்,இசை, நாடகம் ஆகிய மூன்று கலைகள் பெரும்பாலும் காதால் கேட்டு, கண்ணால் இன்புறும் ஒலி வழிப்பிறந்த கலைகள். இவை முத்தமிழ் என்றழைக்கப்படுகிறது.
ஒலி கேட்டு இன்புற்ற அக்கலைகள் கண்ணால் காலத்துக்கும் இன்புறக்கூடிய கலைகளாக மாறினால் அது சிற்பக்கலை. சிற்பக்கலையும், கட்டடக்கலையும் தமிழ் மரபை சார்ந்தது என்பதால் மூன்றோடு இவற்றையும் சேர்த்து ஐந்தமிழ் என்று அழைக்கின்றனர்.விடை பெறும் உணர்வுபண்டைய தமிழர்களின் வாழ்வு கலை வாழ்வாகவே மிளிர்ந்துள்ளது. வீட்டு வாசல் ஓவியக்கோலம் வரவேற்கும்.
தலைவாசலின் கலையழகு புருவங்களை உயர வைக்கும். தூண்களின் சிற்ப வேலைப்பாடு களில் கற்பனை சிறகடிக்கும்.
அரிவாள் மனையில் கூட அன்னப்பறவையின் வடிவம் பொதிந்திருக்கும். பாக்கு வெட்டியில் கூட பசுங்கிளியின் உருவம் மிளிர்ந்திருக்கும். அந்த அழகியல் உணர்வு மெல்ல, மெல்ல விடை பெற்று கொண்டிருக்கிறது.கால கண்ணாடியை தாண்டிய ஒளிபாரம்பரிய கலை பெருமையை இழந்து விடக்கூடாது என்பதற்காக கலை உணர்வுடன் இன்றளவும் கலை மறுமலர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றனர் செட்டிநாட்டு சிற்பக்கலைஞர்கள்.
ஓவியக்கோடுகளை உருவாக்கோடுகளாக்கி சிற்பங்களாகவும், மாளிகை, கோயில்களாகவும் உருவாக்கி வருகின்றனர்.அதனால் தான் இப்பகுதி சிற்பங்கள் கால கண்ணாடியையும் தாண்டி ஒளி வீசிக்கொண்டிருக்கிறது. வள்ளுவர் சிலை முதல் சென்னை வள்ளுவர் கோட்டம் அமைத்தது வரை அனைத்தும் இப்பகுதியை சேர்ந்தவர்களே.அந்த கற்சிற்பங்களை சிறப்பாக செய்து வருகின்றார் காரைக்குடி மாத்தூரை சேர்ந்த வி.ஏகாம்பரம்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமன்றி வெளிநாடுகளுக்கும் இங்கிருந்து சிற்பங்களை செய்து அனுப்பி வைக்கிறார்.இனி அவர், சிற்பங்கள் செய்வதில் வேறெந்த நாட்டிற்கும் இல்லாத மரபு நம் நாட்டிற்கு உண்டு. இயற்கையின் அமைப்பை அப்படியே படியெடுத்து செய்வதில்லை. அதனை உணர்ந்து எக்கருத்தை உணர்த்துகிறது என்று இனம் கண்டு, அதற்கான கால அளவு, உருவ அளவுகளை ஆகமவிதிப்படி கடைபிடித்து சிலை வடிவமைக்கப்படுகிறது.இதற்காக ராசிபுரம், திருப்பூர், ஊத்துக்குளி அன்னவாசல் பகுதியிலிருந்து கற்கள் எடுத்து வரப்படுகிறது.
கோயிலுக்கு தேவையான கற்சிலைகள், தூண்கள் மட்டுமன்றி வீடுகளுக்குரிய சிற்ப வேலைகளும் செய்து கொடுக்கிறோம். 15 வயதிலிருந்தே இதில் ஈடுபட்டு வருகிறேன்.இயந்திரமும் வந்ததுடி.ராமச்சந்திரன், பெத்தாட்சி குடியிருப்பு: விவசாயத்தில் போதிய வருமானம் இல்லாததால் சிற்ப வேலைக்கு வந்து விட்டேன். 25 ஆண்டாக ஈடுபட்டு வருகிறேன். உருவம் செதுக்குவது, முகம் அமைப்பது என்னுடைய பணி. வலம்புரி, இடம்புரி, பிள்ளையார்பட்டி விநாயகர், மாரியம்மன், புவனேஸ்வரி, ஈஸ்வரி, மீனாட்சியம்மன், யாழி, மதுரை வீரன் உள்ளிட்ட பல்வேறு வகையிலான சிலை வடிவமைப்பில் ஈடுபட்டு வருகிறோம்.
முன்பு கல்லை உடைப்பதிலிருந்து கடைசியில் கண் திறக்கும் வரை அனைத்தும் கையினால் செய்யப்பட்டது. தற்போது, இதில் பெரும்பாலானவற்றுக்கு இயந்திரம் வந்து விட்டது. ஆனாலும், கையினால் செய்யும் வேலை கையினால் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. 20 முதல் 30 நாளைக்குள் ஒரு சிலை செய்து கொடுக்க முடியும்.
குறையும் ஆர்வம்பி.ஆர்.சொர்ணம், மாத்தூர்: கன்னியாகுமரி வள்ளுவர் சிலை மட்டுமன்றி அம்பாசமுத்திரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிலை அமைப்பது மற்றும் கோயில் திருப்பணியில் மேஸ்திரியாக பணியாற்றியுள்ளேன். அன்று சிலை சிறப்பாக வடிவமைத்திருக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் எத்தனை மாதங்களானாலும் காத்திருந்தனர். தற்போது வேலை முடிய வேண்டும் என்ற ஆர்வமே உள்ளது, என்றார்.உழைப்பால் மனதிற்கு இதம் தரும் இனிய கலை சிற்பியின் கை வண்ணம் கண்ணில் ஒன்றி வணங்கும் கலை வண்ணம்.