வயலில் நெல் அறுத்து மூடைகளாக கட்டியாயிற்று. உழைத்தவனுக்கு சம்பளம் கொடுத்தாயிற்று. களத்தில் ஆங்காங்கே நெல்மணிகள் சிதறிக் கிடக்கின்றன. அதை மட்டும் அள்ளிச் செல்லாதீர்கள். ஏனெனில் அவை பறவைகளுக்கு உணவாக அமையும். அதிகமான நெல் கிடந்தால் மட்டும், அதை தொழிலாளிகளுக்கு கொடுங்கள். முதலாளி தரும் கூலியை விட, அவர் மனம் உவந்து தரும் சன்மானத்திற்கு பெருமை அதிகம். அடுத்த பருவத்தில் நன்றியுணர்வுடன் தொழிலாளி உழைப்பை இரட்டிப்பாக்குவான். இதனடிப்படையில் பைபிள் வசனங்களைப் பார்ப்போமா!
* திராட்சை தோட்டத்தில் சிந்திக் கிடக்கும் பழங்களைப் பொறுக்க வேண்டாம். அவற்றை எளியோருக்கும், அந்நியருக்கும் விட்டுவிடுங்கள். * உமக்குள்ள யாவற்றையும் விற்று ஏழைகளுக்கு கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். * உமது இரக்கச்செயல்கள் கடவுளின் திருமுன் சென்றடைகின்றன. * நன்மை செய்யவும், பகிர்ந்து வாழவும் மறவாதீர்கள். * உன் சகோதரர்கள் ஏழ்மைப்பட்டு இளைத்துப் போனால் அவர்களுக்கு உதவு. அவர்கள் விருந்தினர் போல உன்னோடு வாழட்டும். * ஏழைகளுக்குக் கொடுப்பவருக்கு குறைவு ஏற்படாது. * ஒருவன் வறியவனாய் இருந்தால், அவன் மட்டில் உன் உள்ளத்தைக் கடினப்படுத்தாதே. உன்கையை மூடிக்கொள்ளாதே. * கொடுங்கள்; உங்களுக்கும் கொடுக்கப்படும்.