ஒரு சமயம் திரு வீழிமிழலை தலத்தில் தங்கி திருஞானசம்பந்தரும், அப்பரும் இறைவனை வழிபட்டனர். அவ்வூரில் கடும் பஞ்சமும், பிணியும் ஏற்பட்டிருந்தது. இருவரும் சிவபெருமானிடம் சென்று பஞ்சம் தீர்க்க பொருள் தருமாறு வேண்டினர். வாசி தீரவே காசு நல்குவீர் என சம்பந்தர் தேவாரம் பாடுகிறார். சிவபெருமானும் தினமும் பொற்காசுகள் தருகிறேன். எல்லோருக்கும் உணவு, உடை அளித்து பஞ்சம் தீருங்கள், என்று அருளுகிறார். இருவரும் அங்கு மடம் அமைத்துத் தங்கியிருந்து பஞ்சம் தீரும் வரையிலும் இறைவனிடம் பொற்காசு பெற்று மக்களுக்குத் தொண்டாற்றினர். எவ்வித சுயநலக் கலப்பும் இல்லாமல் மக்களுக்குச் சேவை செய்தனர். அந்தப்பொருளை ஒரு போதும் தங்களுக்காக பயன்படுத்தவில்லை. ஒரு ஏழை குடும்பம் வறுமையில் வாடியதைக் கண்ட ஆதிசங்கரர் கனக தாரா தோத்திரம் பாடி அன்னையின் அருளால் அவர்களின் ஏழ்மையைப் போக்கினார். தமக்காக பயன்படுத்தவில்லை. உண்மையான தியாக உணர்வும் தொண்டு மனப்பான்மையும் உள்ளவர்கள் இன்றும் தெய்வத்தைக் கண்டு கொண்டு தான் இருக்கிறார்கள். வெளியே சொல்லி வியாபாரம் செய்வதில்லை. தாங்கள் கூறிய அருளாளர்களின் பக்குவம் நமக்கு ஏற்பட்டால் நாமும் தெய்வத்தை நேரடியாக தரிசிக்கலாம்.