ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசியன்று ஸ்ரீரங்கநாதர் பரமபத வாசல் வழியாக நுழைந்து செல்வது தரிசிக்க வேண்டிய காட்சியாகும்.
ஸ்ரீரங்கநாதர் கோயிலில் உள்ள மூன்றாவது பிராகாரத்துக்கு ‘குலசேகரன் திருவீதி’ என்று பெயர். இத்திருச்சுற்றில் வடபுறத்தே உள்ளது ‘பரமபத வாயில்’ எனப்படும்.
நமக்கு இடப்புறமாக ஒரு அறை மூடியிருப்பது போல இருக்கும். மூன்றாவது பிராகார வடபாரிசத்தில் திரும்பியவுடன் ஒரு மண்டபம் இருக்கிறது. இது விஜயரங்க சொக்க நாதரால் கட்டப்பட்டதாகும். இந்த மண்டபத்தை ஒட்டிய மண்டபம் ‘வேத விண்ணப்ப கோஷ்டி’ மண்டபம் எனப்படும்.
பரமபத வாசல் திறப்பதற்கு முன் இம்மண்டபத்தில் பெருமாளுக்கு முன் வேதங்களை விண்ணப்பிப்பார்கள். புண்ணியமிக்க ‘விரஜாநதி’ இம்மண்டபத்தின் அடிப்பகுதியில் ஓடுவதாக ஐதிகம். வைகுண்ட ஏகாதியன்று பரமபத வாயிலைத் திறக்கும் போது பக்தர்கள் இவ்வழியாகச் செல்வர். இங்குள்ள விரஜா நதியில் புண்ணிய நீராடிப் பரமபத வாசல் வழியாக அவர்கள் வைகுண்டம் போவதாக ஐதிகம்.