பதிவு செய்த நாள்
11
பிப்
2019
12:02
தஞ்சாவூர் கும்பகோணத்தில் உள்ள 6 சிவாலயங்களில் மாசிமகம் பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு நேற்று (பிப்., 10ல்) கொடியேற்றம் நடந்தது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர், காசி விஸ்வநாதர், காளஹஸ்தீஸ் வரர், அபிமுகேஸ்வரர், வியாழசோமேஸ்வரர், கவுதமேஸ்வரர் ஆகிய 6 சிவன் கோவில்களில் மாசிமக பெருந்திருவிழா பிரம்மோற்சவமாக 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
இதையடுத்து நேற்று முன்தினம் (பிப்., 9ல்) இரவு பூர்வாங்க பூஜைகள் நடத்தப்பட்டு. நேற்று (பிப்., 10ல்) அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் அனைத்து சுவாமிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்றது. பஞ்சமூர்த்தி சுவாமிகள் சிறப்பு மலர் அலங்காரத்தில் கொடி மரம் முன் எழுந்தருளினர்.
அப்போது வேத பாராயணம், திருமுறைகள், சிறப்பு நாதஸ்வரம், வான வேடிக்கைகள் முழங்க விழா கொடியேற்றினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் சிறப்பம் சமாக 14-ம் தேதி 5ம் திருநாள் இரவு ஓலை சப்பரத்தில் பஞ்சமூர்த்தி புறப்பாடு, 16ம் தேதி 7-ம் திருநாள் இரவு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
18ம் தேதி 9-ம் திருநாளில் அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர், காசி விஸ்வநாதர், வியாழ சோமேஸ்வரர் ஆகிய 4 கோவில்களில் மாலை 6 மணிக்கு தேர் திருவிழா நடைபெறுகிறது. கும்பேஸ்வரர் கோயிலில் இரவு 7 மணிக்கு பஞ்சமூர்த்தி சுவாமிகள் ரதத்தில் வீதியுலா புறப்பாடு நடைபெறுகிறது.
வரும் 19-ம் தேதி மகாமகம் குளத்தில் பகல் 12 மணிக்கு மேல் மதியம் 1 மணிக்குள் மாசிமக தீர்த்தவாரி வைபவம் நடைபெறுகிறது. அப்போது நான்கு கரைகளிலும் பக்தர்கள் புனித நீராட உள்ளனர். அந்த நேரத்தில் 12 சிவாலயங்களில் இருந்து பஞ்சமூர்த்தி சுவாமிகள் வீதியுலாவாக புறப்பட்டு மகாமக குளத்தின் கரைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தவாரி அருளுகின்றனர். இரவு புஷ்ப பல்லக்கில் வீதியுலாவாக சிறப்பு நாதஸ்வர இன்னிசையுடன் அந்தந்த கோவிலை சென்றடைகின்றனர்.
பெருமாள் கோவில்களில் இன்று(11ம் தேதி) கொடியேற்றம்: ஆதிவராக பெருமாள், சக்கர பாணி சுவாமி, ராஜகோபால சுவாமி கோவில்களில் இன்று (11ம் தேதி) காலை மாசிமக பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றப்படுகிறது. வரும் 19ம் தேதி மாசிமகத்தன்று காலையில் சக்கரபாணி கோயில் தேரோட்டமும், தேரில் இருந்து பெருமாள் இறங்கியதும் சக்கர படித்துறையில் தீர்த்தவாரியும் நடக்கிறது. சாரங்கபாணி பெருமாள் பொற்றாமரை குளத்தில் 19ம் தேதி தெப்ப உற்சவம் கண்டருளுகிறார். அந்தந்த கோயில் நிர்வாகத்தினர், உபயதாரர்கள் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.