பதிவு செய்த நாள்
11
பிப்
2019
03:02
பெ.நா.பாளையம்:பாலமலை ரங்கநாதர் கோவிலில் நடந்த கும்பாபிஷேகத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
பெரியநாயக்கன்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் தென் திருப்பதி என்றழைக்கப்படும் பாலமலை ரங்கநாதர் கோவில் உள்ளது.
இங்கு முன் மண்டபம், புதிய கொடிமரம், தன்வந்திரி, தும்பிக்கையாழ்வார், காளிதாஸ் சுவாமிகள், அனுமன், ராமானுஜர் கோவில்கள் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது. நேற்று (பிப்., 10ல்) காலை, 9:00 மணிக்கு பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்கள் கோவிலை சுற்றி வலம் வந்தன.பின், காரமடை ஸ்ரீ சுதர்சன பட்டர் சுவாமிகள் தலைமையில் சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள் முன்னிலையில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து அலங்காரம், தரிசனம், தீர்த்தபிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தன. மாலையில் பெருமாள் திருவீதியுலா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. விழாவையொட்டி, காலை முதல் மாலை வரை அன்னதானம் நடந்தது.விழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள
சிறப்பு பஸ் வசதியை அரசு போக்குவரத்து துறை செய்து இருந்தது.ஆறுக்குட்டி ஆட்டம்! கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி, அம்மா ஒயிலாட்டக்குழு என்ற பெயரில், ஜமாப் வைத்துள்ளார். தமிழகம் முழுவதும் நடக்கும் இடைத்தேர்தல், அ.தி.மு.க., சார்பில் நடத்தப்படும் மாநாடு, லோக்சபா, சட்டசபை தேர்தல்களில், இக்குழுவினருடன் பொதுமக்கள் மத்தியில் மத்தளம் தட்டி, நடனம் ஆடுவது ஆறுக்குட்டியின் வழக்கம். நேற்று (பிப்., 10ல்) தனது குழுவினருடன் கும்பாபிஷேக விழாவில் மத்தளம் தட்டி நடனமாடினார். கோவிலுக்கு வந்த வெளியூர் பக்தர்கள், எம்.எல்.ஏ., மத்தளம் தட்டி ஆடுவதை அதிசயத்துடன் பார்த்துச் சென்றனர்.