பதிவு செய்த நாள்
11
பிப்
2019
04:02
வாழப்பாடி: வாழப்பாடி அருகே, கோதுமலை அடிவாரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில், நிலத்தடி நீர்மட்டம் சரிந்து, விவசாய கிணறு, ஆழ்துளை குழாய் கிணறுகள் வறண்டு விட்டன. இதனால், பெரும் அவதிக்கு ஆளான, மேலூர், மாரியம்மன்புதூர் உள்ளிட்ட கிராம மக்கள், கோதுமலை அடிவாரம், செட்டிக்குட்டையிலுள்ள, மேலூர் முத்து முனியப்பன் சுவாமிக்கு, முப்பூஜை செய்ய முடிவு செய்தனர். அதன்படி, வீட்டுக்கொரு ஆட்டுக்கிடா, சேவல், பன்றி
ஆகியவற்றை பிடித்துச்சென்று, நேற்று (பிப்., 10,ல்), முனியப்பனுக்கு பலி கொடுத்து, வறட்சி நீங்கி மழை பொழிய வேண்டி, வழிபாடு நடத்தினர்.
இன்று (பிப்., 11,ல்) திருமணம்: ஆட்டையாம்பட்டி அருகே, ராஜாபாளையம், கரிக்கட்டாம் பாளையத்திலுள்ள விநாயகர் கோவிலில், அரச மரம், வேப்ப மரம் ஒன்றாக வளர்ந்துள்ளன. சிவனின் அம்சமான அரசு, பார்வதியின் அம்சமான வேப்ப மரங்களுக்கு, திருமண சடங்கு
செய்தால், நல்ல மழை பெய்யும் என்பது நம்பிக்கை. அதன்படி, விநாயகர் கோவிலிலுள்ள, அரச - வேப்ப மரங்களுக்கு, திருமண சடங்கு செய்ய, நேற்று (பிப்., 10,ல்) மாலை, நிச்சயதார்த்த சீர்வரிசையுடன் விழா தொடங்கியது. இன்று (பிப்., 11,ல்) காலை, 6:00 மணிக்கு மேல், 7:30
மணிக்குள் திருமணம் நடக்கவுள்ளது.