பதிவு செய்த நாள்
12
பிப்
2019
03:02
சேலம் மாவட்டம், அம்மாபேட்டை அருகில் சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவில் உள்ளது குமரகிரி திருத்தலம். சேலம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து சன்னியாசிகுண்டுக்குச் செல்லும் மினிபஸ், குமரகிரி அடிவாரம் வழியாகச் செல்லும். ஆனால், பஸ் வசதி குறைவுதான்; ஆட்டோவில் செல்லலாம். அடிவாரத்திலிருந்து சுமார் 600 படிகள் கடந்து மலையேறினால், அழகனாம் பாலதண்டாயுத பாணியை தரிசிக்கலாம். மலைக்குமேலுள்ள திருக்கோயில், முருகனின் ஆணைப்படி ஸ்ரீலஸ்ரீகருப்பண்ண ஞானி என்ற துறவியால் கட்டப்பட்டது. ஞானப் பழம் தனக்குக் கிடைககாத கோபத்தில் பழநிக்குச் செல்லும் வழியில், முருகன் இளைப்பாறிய இடம் இது என்கிறது தலபுராணம்.
குமரகிரி முருகனுக்குப் பிடித்த நைவேத்தியம் மாம்பழம்தான்! திருமண பாக்கியம், குழந்தை பேறு, வியாபார விருத்தி, அமோக விளைச்சல் என எந்தப் பிரார்த்தனையாக இருந்தாலும், முருகனுக்கு மாம்பழம் சமர்ப்பித்து மனதார வேண்டிக்கொள்கின்றனர் பக்தர்கள். அதேபோல், பிரார்த்தனை நிறைவேறிய பிறகும், மாம்பழங்களை குமரனுக்குச் சமர்ப்பித்து வழிபடுவதுடன், பக்தர்களுக்கும் பிரசாதமாக வழங்கி மகிழ்கின்றனர். தீராத நோயால் அவதிப்படுவோர், திடீர் விபத்தில் படுத்தபடுக்கையாகக் கிடப்பவர்கள் என இருந்தால்.... அவர்களின் உறவுக்காரர்கள் இங்கே வந்து, முருகப்பெருமானுக்கு பன்னீர் மற்றும் சந்தனத்தால் அபிஷேகம் செய்து, விருச்சிப்பூவால் திரிசதி அர்ச்சனை செய்து வழிபட்டால், ஆயுள் பலம் கூடும்; நோய் நீங்கி ஆரோக்கியமாக வாழ்வர் என்பது நம்பிக்கை!