கரூர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ளது. வேலாயுதம்பாளையம். இந்த ஊரில், இயற்கை எழில் கொஞ்சும் சிறு குன்றின் மீது அமைந்திருக்கிறது. அருள்மிகு புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்; சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. பராந்தக நெடுஞ்சடையன் எனும் பாண்டிய மன்னனும் அதியன் என்ற மன்னனும் போர்க் காலங்களில் இம்மலையில் உள்ள குகைகளைப் போர்த் தந்திர வேலைகளுக்குப் பயன்படுத்தியதாக, திருக்கோயில் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இந்தக் கோயிலில், மயில் வாகனத்தின் தலை இடப்புறம் நோக்கியும், தோகை வலப்புறமாகவும் திகழ்கின்றன. இத்தகைய அமைப்பு<, சூரசம்ஹாரத்துக்கு முற்பட்ட முருகனின் திருக்கோலத்தைக் குறிக்குமாம். இங்கே முருகனுக்கு நேர்த்திக்கடனாக வேல் செலுத்தி வழிபடும் வழக்கம் பிரசித்தம். அதேபோல், தொடர்ந்து 12 வாரங்கள் - செவ்வாய்க் கிழமைகளில் முருகனுக்குச் செவ்வரளிப் பூ மற்றும் செவ்வாழைப் பழம் படைத்து வழிபட்டால், தடைகள் விலகி விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. ஐப்பசி மாதம், சஷ்டி தினத்தில் தினை மாவு வைத்து வழிபடுவது கூடுதல் விசேஷம் என்கிறார்கள் பக்தர்கள்.