திருத்தலங்களின் மகிமைகளை ஒன்றுக்குமேற்பட்ட பாடல்களில் தொகுத்துப் பாடுவார்கள் அடியார்கள். இவ்வகை பாடல் தொகுப்புகளைத் திருத்தலக் கோவை என்பார்கள். திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் முதலான அடியார்கள் இவ்வாறு திருத்தலக்கோவை பாடியருளியுள்ளனர். அருணகிரிநாதரும் திருத்தலக்கோவை பாட விரும்பினாராம். அதன்படி, கும்பகோணமொடு ஆரூர் சிதம்பரம் எனத் தொடங்கி 29 தலங்களைப் பாடிக்கொண்டே வந்தார். அப்போது ஒரு சிரிப்பொலி கேட்டது. அவ்வாறு நகைத்தது முருகன் என்பதையும் "இத்தலங்களில் மட்டும்தான் யாம் இருக்கிறோமா என்று முருகன் கேட்பதாகவும் உணர்ந்தார் அருணகிரியார். ஆகவே, "உலகெங்கு மேவிய தேவாலயம் தொரு பெருமாளே என்று பாடலை நிறைவு செய்தார் அருணகிரியார். ஆமாம், அகிலங்கள் யாவும் அழகன் முருகனின் அரசாங்கம்தானே?