பதிவு செய்த நாள்
14
பிப்
2019
01:02
கருமத்தம்பட்டி: கருமத்தம்பட்டி அருகில் உள்ள சாமளாபுரம் சோழீஸ்வரர் கோவிலில், ராகு, கேது பெயர்ச்சியை முன்னிட்டு, ஹோமம் வளர்த்து, பரிகார பூஜைகள் நடந்தன.
சாமளாபுரத்தில் வரலாற்று பிரசித்திபெற்ற ஸ்ரீசோழீஸ்வரர் உடனமர் தில்லை நாயகி அம்மன் கோவில் உள்ளது. இங்கு நேற்று, ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சியை முன்னிட்டு, சிறப்பு வழிபாடுகள் நடந்தன.மதியம் 2:02 மணியளவில், ராகு கடக ராசியிலிருந்து மிதுன ராசிக்கும், கேது மகர ராசியிலிருந்து தனுசு ராசிக்கும் இடம் பெயர்ந்தனர்.
இதை முன்னிட்டு சோழீஸ்வரசுவாமி திருக்கோவிலில் அபிஷேக ஆராதனைகளும், ஹோமம் வளர்த்து சிறப்பு பூஜைகளும் நடந்தன. அர்ச்சகர்கள் மகேஷ்சிவம், மணிகண்ட சிவம் தலைமையில், சாமளாபுரம் சிவன் கோவிலை சேர்ந்த குருக்கள், அர்ச்சகர்கள் மற்றும் பூசகர்கள் திரளானோர் இதில் பங்கேற்றனர்.ஏராளமான பக்தர்கள் இந்த பரிகார பூஜைகளில் பங்கேற்றனர்.