முன்னொரு காலத்தில் வியாபாரிகள் சிலர் சந்தையில் கிடைத்த பணத்துடன் நெடுந்தொலைவில் உள்ள தங்கள் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். கொள்ளையர் தொல்லை ஏற்படலாம் என்பதால் ஜெபித்தபடி நடந்தனர். திடீரென வழிப்பறிக் கூட்டம் குறுக்கிட்டது. என்ன ஆச்சரியம்! திடீரென ஒரு தடுப்புச்சுவர் எழுந்தது. அதிர்ச்சியடைந்த கொள்ளையர்கள் தப்பியோட சுவரும் உடனே மறைந்தது. கடவுளின் கருணையால் தப்பியதை உணர்ந்த வியாபாரிகள் பயணத்தை தொடர்ந்தனர். இதே போல தொடர்ந்து கொள்ளையர்கள் தாக்க முயலும் போதெல்லாம் சுவர் எழும்பிக் காத்தது. ஓரிடத்தில் மற்றொரு கொள்ளை கூட்டத்தினர் எதிர்பட்டபோது, சுவர் எழுந்தாலும், இடையிடையே வெளி இருந்தது. இதைப் பயன்படுத்தி கொள்ளையர்கள் வியாபாரிகளை சிறை பிடித்தனர். கொள்ளையர் தலைவன், “தடுப்பு சுவர் எப்படி உருவானது? இந்த அதிசயம் நிகழ்ந்ததில்லையே” என்றான். “நாங்கள் ஜெபித்தபடி பயணம் செய்தோம். அதன் பயனாக சுவர் எழும்பிக் காத்தது. ஆனால், இப்போது பலருக்கும் ஜெபத்தில் ஈடுபாடு குறைந்து போகவே இடைவெளி விழுந்தது” என்றனர். கொள்ளையர்களின் மனதிலும் மாற்றம் உண்டானது. “ஆஹா.. ஜெபத்தின் சக்தியை அறியாமல் இத்தனை காலம் வாழ்வை வீணாக்கினோமே! இனி திருட மாட்டோம்” என உறுதி கொண்டனர்.